தேர்தலுக்கு தயாராகுங்கள்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகும்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் மாநில பொதுக் குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அதில், கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பேசிய அவர், சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; நரேந்திர மோடி தலைமையிலான அரசு 11 மாதங்களில் சாதனை எதுவும் புரியவில்லை; பல்வேறு அவசர சட்டங்களைக் கொண்டு வந்ததே அதன் சாதனை. இந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் சாமானியர்களைச் சென்று சேரவில்லை, முக்கிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டிப் பேசினார் மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும், விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப ஆவன செய்ய வேண்டும் என்று கூறிய ஜி.கே.வாசன், அடுத்து வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினார்.