அது 2010ம் ஆண்டு என்று நினைவு. தமிழகம் இருளிலும் தமிழக முதல்வர் குத்தாட்டங்களிலும், பாராட்டு விழாக்களிலும் மூழ்கியிருந்த காலகட்டம்.

சினிமாக்காரர்களுக்கு ஏதோ நிலம் ஒதுக்கினார் என்று ஒரு பாராட்டு விழா. நிலம் கிடைத்ததா என்று தெரியவில்லை ஆனால் பாராட்டு கிடைத்தது. அந்த விழாவில் வழக்கம்போல் அனைவரும் இந்திரனே சந்திரனே என்று கலைஞரை தூக்கிவைத்து கொண்டாட ஆரம்பித்தனர். புகழ் மாலைகளை சுமக்கமுடியாமல் சுமந்து கொண்டிருந்தார் முத்தமிழ் வித்தகர்.

அஜித் பேச வந்தார். அவரும் ஒரு தூக்கு தூக்கினார். கலைஞரின் முகத்தில் மந்திர புன்னகை. வேதாளத்தில் செய்ததை அன்றே ஆரம்பித்தார் அஜித், சட்டென்று ரிவர்ஸ் கியர். நடிகர்கள் தேவையில்லாத சமூக விஷயங்களில் தலையிட்டு அறிக்கை விடுகிறார்கள். அவர்கள் கலைஞர்கள் எல்லாருக்கும் பொதுவானவர்கள். இந்த அரசியல் சிக்கலில் தலையிட்டு விஷயத்தை பெரிதாக்காமல் அமைதியாக இருக்க உத்தரவு போடும்படி கேட்டுக்கொண்டார்.

ஆப் ஸ்டெம்புக்கு வெளியே போகும் பந்து விக்கெட் கீப்பர் பிடித்துக்கொள்ளட்டும் என்று கலைஞர் விட்டுவிட்டார். அடுத்து அஜித் வீசியது கூக்ளி, கலைஞர் க்ளீன் போல்ட். நடிகர்களை இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு மிரட்டி அழைத்து வருகிறார்கள், இந்த அநியாயத்தை தட்டி கேளுங்கள் என்று சொன்னதும் மானாடும் மயிலாடும் முகத்தில் ஈயாடவில்லை.

வழக்கமாக தலைவர் முகம் திரையில் வந்தால் நாம் எழுந்து நின்று விசிலடித்து ஆடுவோம். அன்றைய நாளில் தலைவரே எழுந்து நின்று விசிலடித்து கைத்தட்டினார். அதுவும் எங்கே, கலைஞருக்கு அடுத்த சீட்டில் இருந்து. எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியதை அறிந்தோ அறியாமலோ உற்சாகமாக கைதட்டிக்கொண்டிருந்தார் ரஜினி.

கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தின் வால் சில நேரம் வெளியில் தொங்கும். அதில் ஒரு ரோமத்தை பிடுங்கும் வேலையை சிறு வயதில் நானே செய்திருக்கிறேன். ஆனால் சிங்கத்தின் குகையில் நுழைந்து அதன் பிடரி மயிரை கொத்தாக பிடித்து உலுக்கும் காரியத்தை செய்ய அசாத்திய துணிச்சல் வேண்டும், அஜித்திடம் அது இருந்தது.

இந்த பழங்கதை எல்லாம் ஏன் இன்றைக்கு என்றால் அன்று கலைஞருக்கு வலப்பக்கம் எழுந்து நின்று கைதட்டியவர் ரஜினி என்று சொன்னேனே, அவருக்கு இடப்பக்கம் அமர்ந்திருந்தவர் யார் தெரியுமா..? அவர் தான் இன்றைக்கு மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை கண்டு பொங்கி எழுந்து டிவியை உடைப்பவர்.

வீரம் வீரா படத்தில் நடித்தவர்கள் காட்டிய வீரத்தை விருமாண்டிக்கு அன்று காட்ட துணிவில்லை. வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் இடம் தெரியாமல் பம்மிக்கொண்டிருந்தார். என்ன இருந்தாலும் அட்டைக்கத்தி வீரர்தானே.

அவர் சார்ந்த திரையுலகில் எல்லாருக்கும் ஏற்பட்ட பிரச்னைக்கு அன்று வாய்திறவாமல் இருந்தவர் இன்று சகட்டுமேனிக்கு எல்லார் மேலும் சேறிறைக்கிறார். அனிதாவின் அப்பாவிடம் கேட்டுக்கொண்டு ஓட்டுப்போட வேண்டுமாம். ஏன் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவியின் அப்பாவிடம் கேட்டுவிட்டு ஓட்டு போடக் கூடாதா? நாற்றமெடுக்கும் பிண அரசியல்.

கலைஞரும் ஜெயலலிதாவும் அரசியல் உச்சத்தில் இருந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு காளையாக துள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார் விஜயகாந்த், அது வீரம். ஆனால் இன்று காளைக்கு காயடிக்கப்பட்டுவிட்டது. விரட்டி விரட்டி எதிரிகளை பந்தாடும் எதிர்பார்க்கப்பட்ட காளையை இன்றைக்கு விராட்டி சாணிக்காக பயன்படும் நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டனர் சுற்றத்தார்.

ஆனாலும் அன்றைக்கு விஜயகாந்த் காட்டியது அக்மார்க் வீரம். இன்றைய ட்விட்டர் வீரம் அதன் கால் தூசிக்கு ஈடாகாது. சினிமாவில் மட்டுமல்ல அரசியலில் நடிப்பதையும் கமல் நிறுத்திக்கொள்ளவேண்டும். ஸ்டார்ட், ஆக்ஷன் சொல்லுமிடமில்லை சட்டசபை.

கட்டுரை- V. வெங்கடேஷ் , சிங்கப்பூர்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...