பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது கட்சி பதவியான, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் வழங்கினார். இதனால் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும், பதவியை ராஜினாமா செய்த தோப்பு வெங்கடாச்சலம் நான் எப்போதும் அ.தி.மு.க. தொண்டன். அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்றார்.

இந்நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் இன்று தனது வீட்டில் தனது ஆதரவாளர் களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், நான் எந்தக் காரணம் கொண்டும் ஒரு போதும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். அதே நேரம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருந்துறை பகுதியில் அ.தி.மு.க.வுக்கு வேலை செய்யாமல் அ.ம.மு.க.வுக்கு வேலை செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

கருத்துக் கணிப்பை மீறி வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  நான் அ.தி.மு.க.வை விட்டு ஒரு போதும் விலக மாட்டேன்.  வேறு கட்சிக்காரர்கள் அமைச்சர் பதவி கொடுத்தாலும்
அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். மக்களோடு மக்களாக அ.தி.மு.க. தொண்டனாக கரை வேட்டி  கட்டி கொண்டு என்றும் அ.தி.மு.க தொண்டனாகவே
இருப்பேன்.

கூவத்தூரில் இருந்து நான் முதல்வருக்கு உறுதுணையாக நின்றேன். கூவத்தூரில் இருந்து கொண்டு முதல்வர் ஆவதற்கு எனது ஆதரவை வழங்கினேன். இப்போதும் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும், சிறப்பாக உறுதுணையுடன் செயல்படும் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவாகவே இருக்கிறேன்.

முதல்வர், துணைமுதல்வர் இருவரும் எங்கள் மீது நம்பிக்கையுடனும் ஆதரவுடனும் இருக்கிறார்கள். எப்போது சென்று பார்க்க வேண்டும் என்றாலும் நேரம் ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். கோரிக்கையை நிறைவேற்றி வைக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சாய கழிவு நீர் பிரச்சனை நிலவி வருகிறது. அதுவும் மழை பொய்த்த காலத்தில் இந்த சாயக்கழிவு குடிநீரில் கலந்து வருகிறது. இதனால் குடிநீர் குடிக்க உகந்தது அல்ல என்று அப்போதய தமிழக முதல்வர் அம்மாவிடம் கூறி பெருந்துறை பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும். அதுவும் கொடிவேரி அணை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என கேட்டேன். அம்மாவை 2 முறை சந்தித்து எனது கோரிக்கையை வைத்தேன். அவரும் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக நிதியை அறிவித்தார். இந்நிலையில் அம்மா மறைந்தார்.

தொடர்ந்து இந்தக் கோரிக்கையை முதல்வர் அண்ணன் பழனிசாமியிடம் வைத்தேன். சிறிது காலம் தாமதம் ஏற்பட்டாலும் குடிநீர் திட்டத்துக்கு அவர் ரூ.240 கோடி ஒதுக்கினார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என நான் அவருக்கு துணையாக நின்றேன். இப்போதும் எனது நிலை அதேதான்.அதில் எந்த மாற்றமும் இல்லை.

அ.தி.மு.க.வில் இருப்பவர்களே கட்சிக்கு துரோகம் செய்து உள்ளனர். அப்படிப்பட்ட சிலரை நாங்கள் பிடித்து கொடுத்தோம். தகுந்த ஆதாரத்துடன் இதை கொடுத்தும் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் (அமைச்சர் கருப்பணன்) தலையீட்டின் பேரில் வெளியே விட்டு விட்டார்கள்.

இதனால் நான் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். ஒரு முக்கிய நபர் அ.தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி பணமும் கொடுத்துள்ளார். இதையும் நான் கட்சி தலைமையில் கூறி உள்ளேன். அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு விசாரிப்போம் என்று கூறி உள்ளனர்… என்று தனது செய்தியாளர் சந்திப்பில் கூறினார் தோப்பு வெங்கடாசலம்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...