திருமாவளவனை கைது செய்ய வேண்டும் : எச்.ராஜா

சென்னை:
மதக் கலவரத்தை தூண்டும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக.,வின் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார் என்ற இளைஞர். இந்த கொலை தொடர்பாக தினமும் ஒவ்வொரு தகவலும் சர்ச்சைகளும் வருகின்றன.
சுவாதி கொலை வழக்கை காவல்துறை ஒருபக்கம் விசாரிக்க, சில அரசியல் கட்சியின் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். சுவாதி கொலை வழக்கின் திடீர் விசாரணை அதிகாரிகள் ஆகிவிட்டார்கள் பாஜகவின் எச்.ராஜாவும், விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவனும்.

இருவரும் மாறி மாறி தங்கள் யூகங்களின் அடிப்படையில் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். சுவாதி முஸ்லீம் ஒருவரால் தான் கொல்லப்பட்டார் என சிலர் முதலில் கூறினார்கள்.

சுவாதி முஸ்லீமாக மாற இருந்தார், அவர் ரமலான் நோன்பு இருந்தார், இது ஆர்.எஸ்.எஸ். தரப்பினருக்கும் தெரியும் என கூறி தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தினார் திருமாவளவன். திருமாவளவனின் இந்த கருத்துக்கு கடுமையான கண்டணங்களை தெரிவித்த எச்.ராஜா அவர் மீது வழக்கு தொடரப்படும் என கூறினார்.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு பற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்களைத் கூறி வரும் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். சுவாதி முஸ்லிமாக மதம் மாற இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது.

சுவாதி கொலை வழக்கை திசை திருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு?. எனவே இந்த வழக்கில் பல உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.