புர்ஹான் வானி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி: ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் போலீசாரால் கொல்லப்பட்ட புர்ஹான் வானி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதி ஆவான் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் காஷ்மீரில் நடைபெறும் வன்முறை பற்றிய விவாதத்திற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காஷ்மீர் விவகாரத்தை பொறுத்த வரை கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏற்க்கனவே ஒரு ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார் நானும் காஷ்மீர் முதல்வர் மெஹபூபாவிடமும், ராணுவத் தளபதியுடனும் பேசியுள்ளேன். கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பொழுது குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்யுமாறு அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன். அதே போல் அபாயம் இல்லாத ஆயுதங்களை பயன்படுத்துமாறும் கூறியுள்ளேன்.

இதுவரை 566 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 1700 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 200 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதுகாப்பு படை வீரர்கள் 1740 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். பொதுமக்களில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்து போன பாதுகாப்பபு படைவீரர்களின் மரணத்தை சிலர் கொண்டாடுகிகின்றனர். இது ஒரு மனிதத் தன்மையற்ற செயல். புர்ஹான் வாணி உள்ளிட்ட மூன்று தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள். அவர்களில் புர்ஹான் வானி தெற்கு காஷ்மீரின் ஹிஸ்புல் அமைப்பின் கமாண்டர். இளைஞர்கள் மத்தியில் மதப்பிரச்சாரம் செய்து வந்தவன். அவன் மீது கொலை உள்ளிட்ட 15 எப்.ஐ.,ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நானும் மெஹபூபாவும் தீவிரவாதம் தொடர்பாக பொதுமக்களுடன் எவ்வாறு பேச்சு வார்தையை தொடங்குவது என்பது பற்றி ஆலோசித்துள்ளோம். பாகிஸ்தானை பொறுத்த வரை மதத்தின் அடிப்படையில் உருவான ஒரு நாடு. தங்கள் நாட்டையே அதனால் பாதுகாக்க முடியவில்லை. அவர்கள் இந்திய முஸ்லீம்களை பற்றி பேசலாமா? இந்திய மக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.