தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டுமென்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக இரு கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(ழிணிணிஜி) முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இம்முடிவுகளின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படாததால் பெரும் குழப்பங்களும், முறைகேடுகளும் நடக்கும் வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் மே ஒன்றாம் தேதியும், ஜூலை 24 ஆம் தேதியும் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் 4.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 51 ஆயிரம் மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். இதனால் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களிடையே மருத்துவப் படிப்பில் சேர கடும்போட்டி நிலவும். இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களை மட்டும் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 65% அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழக்கம் போல மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தால் ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 35% இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலுள்ள அனைத்து இடங்களும் எவ்வாறு நிரப்பப் படும் என்பது தான் மாணவர்கள் மத்தியில் இப்போது மிகப்பெரிய வினாவாக உருவெடுத்திருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள சில ஆயிரம் இடங்களுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் போது, அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையிலும், நன்கொடைக் கொள்ளையிலும் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை இல்லாதவை என்பது அனைவரும் அறிந்த உண்மை. நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் ஆராய்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அவற்றுக்கு அளிக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை என்பது தகுதி அடிப்படையில் இல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே நடைபெற்று வருகின்றன. மருத்துவப்படிப்பில் இடம் தருவதாகக் கூறி 109 பேரிடம் மொத்தம் ரூ.73 கோடி வசூலித்து ஏமாற்றிவிட்டதாக ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மீது புகார் எழுந்திருப்பதே இதற்கு சாட்சியாகும்.

அதுமட்டுமின்றி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (ழிணிணிஜி) அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப்படிப்பு இடங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்பது தான். தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை நடத்தி தரவரிசையை வெளியிடுவதால் மட்டுமே தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மருத்துவ கல்வி வணிகத்தை தடுத்து விட முடியாது. நுழைவுத் தேர்வு தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தும் அதிகாரம் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், அந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசையை புறந்தள்ளிவிட்டு பணவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் ஆபத்து உள்ளது. இது மருத்துவ பொது நுழைவுத்தேர்வின் நோக்கத்தை சிதைத்து விடும்.

பஞ்சாப் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முறைகேடுகளை தடுக்கும் வகையில் அவற்றின் மாணவர் சேர்க்கையையும் அம்மாநில அரசே ஒற்றைச்சாளர முறையில் நடத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே அணுகுமுறை தேவை என்பதற்காக பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்த மத்திய அரசு, பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதித்து விட்டு, மற்ற மாநிலங்களில் முறைகேடுகள் நடப்பதற்கு வழிவகுத்து விடக்கூடாது. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒற்றைச்சாளர முறையில் அரசே மாணவர் சேர்க்கை நடத்த மத்திய சுகாதாரம் &குடும்ப நல அமைச்சகம் ஆணையிட வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை பா.ம.க. ஏற்றுக்கொள்வதாக பொருள் அல்ல. அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் உறுதியான நிலைப்பாடு. ஒருவேளை அடுத்த ஆண்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டால், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும் என்பது தான் பாமக நிலைப்பாடாகும்.