இந்து தம்பதிகளே.. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வீர்: ஆர்எஸ்எஸ்

அதிகரித்து வரும் முஸ்லிம் மக்கள் தொகையை ஈடு செய்ய இந்து தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.

ஆக்ராவில், புதுமணத் தம்பதிகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் தர்பன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஒரு வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. பின்னர் பேசிய தர்பன், “நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் செழிக்கச் செய்ய நாம் நமது சந்ததிகளை பெருக்க வேண்டும். இதைத் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியிருக்கிறார்.

உதாரணத்துக்கு பிரான்ஸ் நாட்டை எடுத்துக் கொள்வோம், “பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 1.8% பேர் மட்டுமே ஆனால் அங்கு மற்ற சமூகத்தினரின் அளவு 8.1% ஆக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் பிரான்ஸ் நாட்டில் அடுத்த 25 ஆண்டுகளில் வெளியில் இருந்து குடியேறியவர்கள் மட்டுமே இருப்பர்.

இதேபோல் ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் முஸ்லிம்களே அதிகம் இருக்கின்றனர். எனவே, இந்து தம்பதிகளே.. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வீர்” என்றார்.