ஆர்.எஸ்.எஸ். குறித்த கருத்தில் விசாரணையை சந்திக்கத் தயார்: ராகுல்

மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில், வழக்கு விசாரணையை சந்திக்கத் தயார் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாந்தி என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பேரணியில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் பங்கேற்றார். அப்போது, மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக பிவாந்தி பகுதியின் ஆர்எஸ்எஸ் செயலாளர் ராஜேஷ் மகாதேவ் குன்டே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதன் பேரில் ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. வழக்கையும், சம்மனையும் ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ராகுலின் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ராகுல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘நான் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டவில்லை. மகாத்மா காந்தியைக் கொலை செய்தவருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பு உண்டு’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் யு.ஆர்.லலித், ‘கடந்த 60 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும், மகாத்மா காந்தியின் கொலையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தொடர்புபடுத்தி காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது. ராகுல் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பேசும்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பைக் களங்கப்படுத்தி வருகிறார். எனவே, மகாத்மா காந்தி கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்பதை அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘நான் சொன்ன வார்த்தைகளைத் திரும்பப் பெற மாட்டேன். இப்போதும் அதையே சொல்கிறேன். எப்போதும் அதைச் சொல்வேன். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வரட்டும். வழக்கைச் சந்திக்க தயார்’ என்று ராகுலின் நிலை குறித்து தெரிவித்தார்.

இதையடுத்து, பிவாந்தி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை சந்திக்க உத்தரவிட்டு, மேல்முறையீடு மனுவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டனர்.