October 16, 2021, 11:19 pm
More

  ARTICLE - SECTIONS

  பிரசவம் – மரபு வழி மருத்துவம் – அலோபதி…

  பிரசவம் – மரபு வழி மருத்துவம் – அலோபதி…

  antibiotics - 1

  இயற்கை மருத்துவம் இயல்பான பிரசவம் சரியா… மருத்துவமனையில் நிபுணர்கள் மற்றும் அதி நவீன கருவிகளுடன் பிரசவம் செய்வது சரியா என்ற விவாதப் பொருள் கொஞ்சம் தந்திரமானது. அதுவும் இயற்கை மருத்துவத்தில் ஒரு மரணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் பேசுவது மிகவும் உள் நோக்கம் கொண்டது.

  ஒரு தரப்பின் பலவீனமான அம்சத்தை இன்னொன்றின் பலமான அம்சத்துடன் மோதவிட்டு முன்னதான் மீதான அவமாரியாதையைத் தோற்றுவிக்கும் தந்திரம்.

  அலோபதி மருத்துவத்தின் வணிகக் கொள்ளையடிப்பைப் பற்றிப் பேசாமல் அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் இருக்கும்வரை அலோபதி மருத்துவத்தின் கோட்பாட்டுரீதியான நன்மைகள், உயர்வுகள் பற்றிப் பேசி எந்த  பலனும் இல்லை.

  *

  பழங்காலக் கட்டடக் கலை சிறந்தா… இன்றைய கட்டடக் கலை சிறந்ததா…? 100 மாடிக் கட்டடம் பழங்காலத்தில் இல்லை. அதே நேரம் நேற்றைய வசதி வாய்ப்புகளைக் கொண்டு பெரிய கோவில் கட்டியதென்பது நிச்சயம் பெரும் சாதனையே.

  நேற்றைய இலக்கியங்கள் இன்றைய இலக்கியங்களுக்கு எந்தவகையிலும் சளைத்தவை அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவை இன்றைய சாதனைகளைவிட மிகவும் உயர்வானவையே.

  நேற்றைய சிற்பக் கலை இன்றைய சிற்பக் கலையைவிட அதனளவில் உயர்வானதே.

  ஆனால், நேற்றைய வானவியலைவிட இன்றைய வானவியல் பல மடங்கு உயர்வானது. நேற்றைய கணிதத் திறமையைவிட இன்றைய கணித சாதனைகள் உயர்ந்தவையே. நேற்றைய மருத்துவத்தைவிட இன்றைய மருத்துவம் பல மடங்கு உயர்ந்ததுதான்.

  அதாவது கலைகளில் பழங்காலம் உயர்ந்த நிலையில் இருந்தது. விஞ்ஞானத் துறைகளில் அப்படி இல்லை (இருந்திருக்க முடியவில்லை). இன்று விஞ்ஞானத் துறைகளில் பெரும் பாய்ச்சல்கள் நடந்திருக்கின்றன.

  அந்தவகையில் எந்தவொரு நாட்டு பாரம்பரிய மருத்துவங்களைவிடவும் அலோபதியே சிறந்தது. இதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு மிகவும் குறைவே. அலோபதியின் வெற்றிப் புள்ளிவிவரங்கள் பிற மருத்துவ முறைகளின் தரவுகளைவிட மிக மிக அதிகம் (சராசரி ஆயுள் போன்ற பிழையான கணக்கீடுகள் நீங்கலாக).

  ஆனால், பிரசவம் என்ற விஷயம் மருத்துவ நிபுணத்துவம் தேவைப்படாதது. அல்லது பிற நோய்களோடு ஒப்பிடுகையில் மருத்துவக் குறுக்கீட்டின் அவசியம் அவ்வளவாகத் தேவைப்படாத விஷயம். இன்று பாரம்பரிய ஞானம், அனுபவம் அறுபட்டுப் போனதால்தான் இயற்கை மருத்துவ முறையிலான பிரசவம் எதிர்பார்க்கும் வெற்றியைத் தருவதில்லை. பாரம்பரிய வாழ்க்கை முறையில் இருந்து பெரிதும் விலகிவந்திருக்கும் நிலையில் பாரம்பரியத் தீர்வுகள் அந்த அளவுக்கு வெற்றியைத் தரமுடியாது. பாரம்பரிய ஞானம், பாரம்பரிய வாழ்க்கை முறை ஆகியவற்றை மீட்டெடுத்துவிட்டால் அது பழைய காலம் போல் வெற்றிகரமான பிரசவ வழிமுறையாக நீடிக்க முடியும் என்று இயற்கை மருத்துவ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

  இதில் இன்னும் சிலர் இன்றைய நவீன காலகட்ட வசதிகளை பிரசவ கால பரிசோதனைகள், நெருக்கடிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், சுகப்பிரசவத்துக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

  மனித பிரசவம் என்பது மிகவும் சிக்கலானது. மனிதக் குழந்தையின் தலை பெரிதாகவும் தாயின் இடுப்பு எலும்பு இளகிக் கொடுக்கும் அளவுக்கு அல்லது சுகப்பிரசவம் நடப்பதற்குத் தோதானதாகவும் இல்லை என்று அலோபதி மருத்துவ நிபுணர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் சொல்கிறார்கள்.

  இரண்டு தரப்பினரிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இருக்கின்றன.

  மரபு ஞானம், பாரம்பரிய வாழ்க்கை முறை ஆகியவற்றை மீட்டெடுப்பது எப்படி? பிரசவ கால நெருக்கடி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும் என்ற நிலையில் தாய்-சேய் உயிரைப் பணயம் வைத்து இந்த சுகப்பிரசவ முயற்சியை வீடுகளில், இயற்கை மருத்து வழியில் முன்னெடுப்பது சரியா..?

  சிறிய இடுப்பெலும்பு, பெரிய தலை என்ற  சிக்கலானது உண்மையிலேயே அவ்வளவு பெரியதா..? இயற்கை நிச்சயம் அப்படி துரதிஷ்டநிலையை ஒரு உயிருக்குக் கொடுத்திருக்காது. அல்லது ஒரு உயிரினம் காலப்போக்கில் அதை வென்றெடுப்பதற்கான வழிமுறையைக் கண்டுபிடிக்காமல் இருக்காது.

  சுமார் ஒரு தலைமுறைக்கு முன்புவரை எத்தனையோ தாய்மார்கள் ஐந்திலிருந்து பத்து குழந்தைகள் வரை சுகப்பிரசவமாகப் பெற்றதோடு நில்லாமல் சுமார் 80-90 வயதுவரை திடகாத்திரமாக வாழ்ந்தும் வந்திருக்கிறார்கள். இன்றும் அப்படியானவர்களை கிராமப்புறங்களில் பார்க்கவும் முடியும். அவர்களுக்கெல்லாம் சிறிய தலை குழந்தைகள் பிறந்தனரா..? அவர்களுடைய இடுப்பெலும்புகளை இயற்கை விசேஷமாகப் படைத்து அனுப்பியிருக்கின்றதா என்ன..?

  கடந்த காலத்தில் பிரசவ கால இறப்புக்கு சுகாதாரமின்மை, நோய்த் தொற்று போன்றவையே பெரிதும் காரணமாக இருந்திருக்கும். அதைச் சரி செய்தாலே போதும்.

  அதிலும் இன்று பிரசவ கால இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருக்க அலோபதி காரணம் என்று சொல்பவர்கள் நேற்று மரபு வழியில் பிரசவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன என்பதைச் சொல்வதில்லை. ஆயிரத்துக்கு ஐந்து அல்லது பத்து என்று இருந்தாலே அதிகம். அதாவது இன்று மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், நேற்று நன்றாகவே இருந்திருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. நேற்றைவிட இன்றைய மேம்பட்ட நிலை என்பது ஏதோ மரபு வழிப் பிரசவத்தில் 100க்கு ஐம்பது பேர் இறந்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியே பேசுகிறார்கள்.

  எனவே, இயற்கை நிகழ்வான பிரசவத்தில் அலோபதி மருத்துவமனைகளில் மரபு ஞானத்தைப் பயன்படுத்த முன்னுரிமை தரவேண்டும். பாரம்பரிய வாழ்க்கை முறையை முன்னெடுக்க கர்ப்பிணிகள் முன்வரவேண்டும். மாவாட்டவும் கிணற்றில் நீர் இறைக்கவும் விரும்பாத, முடியாத கர்ப்பிணிகள் அதற்கு இணையான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். மருத்துவமனைகளில் சேர்ந்து சுகப்பிரசவத்துக்கே முயற்சி செய்யலாம். நிலைமை கைமீறிப் போகும்போது நவீன அலோபதி வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

  sushrutha - 2

  நாட்டு மாட்டுப் பால், நாட்டுக் கோழி, இயற்கை விவசாயம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தருவதுபோல் ஒவ்வொரு பெரிய மருத்துவமனையும் மரபு வழி சிகிச்சையையும் கொடுக்கவேண்டும். நவீன உபகரணங்களின் மூலம் பரிசோதனைசெய்தும் வரவேண்டும். ஏதேனும் தவறுகள் நடப்பதாகத் தெரிந்தால் அலோபதிக்கு மாறவேண்டும். இதுவே சரியானது.

  *

  பொதுவாகவே, அலோபதியையும் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஒப்பிடும்போது கூடுதலாக இன்னொரு அம்சத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். அலோபதி மருத்துவத்தின் பின்னால் இருக்கும் வணிக நோக்கங்கள், பக்க விளவுகள்.

  இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகியவற்றில் இருக்கும் பிரசவம் தொடர்பான வெற்றி சதவிகிதத்தைவிட அலோபதியில் மிகவும் அதிகம் என்பது உண்மையே… அதிலும் சிசேரியன் என்ற முரட்டு வழிமுறை மூலம் பெறும் வெற்றியை  மிகுந்த தயக்கத்துடன்தான் ஏற்றுக்கொள்ள முடியும். என்றாலும் தாய் சேய் உயிருடன் காப்பாற்றப்படுகிறார்கள் என்ற அளவில் அலோபதி சரியான வழிமுறையே. ஆனால், இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், சுகப் பிரசவத்தை சாத்தியப்படுத்துவதில் அலோபதியின் வெற்றி விகிதம் என்ன..?

  இரண்டாவதாக பிரசவம் போன்ற மிக அடிப்படையான மருத்துவ சேவைக்கு இவ்வளவு தொகையை தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கலாமா? போலியோ சொட்டு மருந்துபோல் அதை இலவசமாகவோ, குறைந்த செலவிலோ ஏன் செய்து தரமுடியவில்லை. இன்ஷுரன்ஸ் பாதுகாப்பு ஏன் அதுபோன்ற சிகிச்சைக்குத் தரப்படுவதில்லை.

  இந்த இடத்தில் இன்னொரு விஷயம் வருகிறது.

  அலோபதி என்பதை பொதுவாக விமர்சித்துவிட முடியாது. தனியார் மருத்துவமனைகளின் அலோபதி சிகிச்சைதான் கொள்ளையடிப்பை இலக்காகக் கொண்டது. அரசுமருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அப்படியான எண்ணம் கொண்டவர்கள் அல்ல. எனவே, பாரம்பரிய வாழ்க்கை முறை, மரபு வழி மருத்துவம், அரசு மருத்துமனையில் சுகப்பிரசவம், நிலைமை கை மீறிப் போனால் சிசேரியன் அல்லது ரத்தம் ஏற்றுதல் போன்ற அலோபதி சிகிச்சை இதுதான் கர்ப்பிணிகளுக்கான நியாயமான தீர்வு.

  *

  siddha1 - 3

  நோய்களைக் கண்டறிதல், விபத்துகள், மாரடைப்பு போன்ற உடனடி சிகிச்சை தேவைப்படும் விஷயங்களில் மட்டுமே அலோபதி மருத்துவத்தை நவீன மருத்துவர்கள் பின்பற்றவேண்டும். பிற நேரங்களில் மரபு வழி மருத்துவத்தை நவீன மருத்துவர்கள் பயன்படுத்திப் பார்ப்பதில் தவறில்லை. அவர்களுடைய மருத்துவப் படிப்பில் அதற்கான ஒரு பாடமும் மிக விரிவாக ஆழமாக இடம்பெற வேண்டும்.

  அம்மை நோய் வந்தவர்களுடைய உடம்பில் இருந்து நுண்கிருமிகளை எடுத்து அதை வைத்தே நோய் இல்லாதவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுத்து வெற்றிகரமாக அந்த நோயைத் தடுத்த பெருமை பாரம்பரிய மருத்துவமுறையில் உண்டு. எலும்பு முறிவுகளுக்கு கட்டுப் போட்டு குணப்பத்தியிருக்கிறார்கள். பாம்புக் கடிகளுக்கு மருந்து இருந்திருக்கிறது. எனவே மரபு வழி மருத்துவத்தை, ’தீஸ் ப்ளடி இண்டியன்ஸ்’ என்ற மெக்காலேவின் கண் கொண்டு பார்ப்பதை நிறுத்தவேண்டும்.

  பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படைகள் : நோய் வரும் முன் காப்பது, உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, நோயின் வேரைக் கண்டுபிடித்து அதை மாற்ற முயற்சி செய்வது இவையே.

  அலோபதியின் அடிப்படைகள் :  உடனடி பலன், நோயின் அறிகுறியைத் தாக்கி அழித்தல், மருந்தின் பக்க விளைவைத் தடுக்க இன்னொரு மருந்து (அதன் பக்க விளைவைத் தடுக்க வேறொன்று), நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தி மருந்தையே சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்துவது.

  அலோபதி மருத்துவத்தை பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கவேண்டும்.

  அடுத்ததாக, அலோபதி மருத்துவத்தின் வணிகக் கொள்ளையைத் தடுக்கவேண்டும்.

  அரசு மருத்துவமனைகளில் தூய்மை குறைவாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இருக்கிறார்கள். கட்டணம் கிடையாது. அல்லது மிக மிகக் குறைவு.

  தனியார் மருத்துவமனிகளில் தூய்மை அதிகம். நோயாளிகள் குறைவு. வசதி வாய்ப்புகள் அதிகம். கட்டணம் மிக மிக அதிகம். இல்லாத நோயை இருப்பதாகச் சொல்லி கொள்ளையடிப்பதும் அதிகம்.

  மரபும் நவீனமும் கலந்த மருத்துவம், தூய்மையான மருத்துவமனைகள், நவீன கருவிகள், தரமான சேவை, கட்டணம் குறைவு இதுவே லட்சிய எதிர்பார்ப்பு.

  தனியார் மருத்துவர்கள் வாரத்துக்கு இரண்டு நாள் அரசு மருத்துவமனையில் பணிபுரியவேண்டும். அரசு மருத்துவமனையின் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் வாரத்துக்கு இரண்டு நாள் சிகிச்சை தரவேண்டும்.

  அரசாங்கமானது தனியார் மருத்துவர்களுக்கு இரண்டு நாட்களுக்கான தொகையை (தனியார் மருத்துவமனை தரும் சம்பளத்தை) கொடுக்கவேண்டும். அதுபோலவே அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கான தனியார் மருத்துவ சிகிச்சைக் கட்டணத்தையும் தனியார் நிறுவனங்களுக்குத் தந்துவிடவேண்டும். எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ போன்ற பல வருடங்கள் கழித்துப் பலன் தரும் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்பாக நாளையே பலன் தரும் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும். டிமானிடைசேஷன், டிஜிட்டல் பரிவர்த்தனை, வருமான வரி அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் பெருகியிருக்கும் அரசின் வருவாயைக் கொண்டு மக்களுக்கு நேரடியாக, உடனடியாகப் பலன் தரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். குறைந்த விலையில் மருந்துகள், முக்கிய மருந்துகளின் விலைக்குறைப்பு போன்றவற்றோடு இவையும்  முன்னெடுக்கப்பட்டால் நல்லாட்சி வழங்கும் அதிகாரமும் வாய்ப்பும் கைவிட்டுப் போகாமல் இருக்கும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-