கர்நாடக இசையும் கிறிஸ்தவமயமாக்கமும்…
சமீபத்தில் எழுந்துள்ள இந்தப் பிரச்னையை கலை சுதந்தரத்துக்கும் மத அடிப்படைவாதத்துக்கும் இடையிலான மோதலாகத் தவறாகச் சித்திரிக்கிறர்கள்.
உண்மையில் இந்த இடத்தில் இது ஒரு கலைஞருடைய (தியாகராஜ ஸ்வாமிகள்) படைப்பை அவரை மதிக்காத ஓர் வல்லாதிக்க அமைப்பின் (கிறிஸ்தவம்) மலின அரசியலுக்கு ஏற்பத் திரிக்கும் செயலே. தியாகப்பிருமத்தை மதிப்பவர்களைக் கொண்டே இதைச் செய்ததில்தான் கிறிஸ்தவத்தின் தந்திரமான, அபாயகரமான அடிப்படைவாதம் ஒளிந்துகொண்டிருக்கிறது. இது சம தர்ம பாவம் என்ற போர்வையில் இந்து மதத்தை அதன் கலையை அழிக்க முயற்சி செய்யும் ஓர் அரசியல் செயல்பாடு மட்டுமே. எனவே, அந்தக் கோணத்திலேயே எதிர்கொள்ளவும்படவேண்டும்.
பொதுவாகவே, மக்களை மதம் மாற்றுவது போலவே இந்து அடையாளங்கள், குறியீடுகள், விழாக்கள் ஆகியவற்றையும் மதம் மாற்றும் முயற்சியில் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டு வந்திருக்கிறார்கள்.
காவி உடை, சம்ஸ்கிருதக் கலப்பு, கொடிமரம், ஆலயமணி, கோவில் யானை, மொட்டையடித்தல், பாத யாத்திரை, சிலுவைக் குறியிட்ட விளக்கு என பல இந்து மரபுகளை, அடையாளங்களை கிறிஸ்தவம் உள்வாங்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் சமீபத்திய முயற்சியாக கர்நாடக இசையை கிறிஸ்தவம் பக்கம் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
உண்மையில் இவை கிறிஸ்தவம் இந்து மதத்தை விழுங்கும் செயலா… இந்து மதம் கிறிஸ்தவத்தை விழுங்கும் செயலா..? அல்லது இரண்டின் இயல்பான இணைப்பா?
இரு மதங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றின் இயல்பான இணைப்பு என்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒன்று இன்னொன்றை விழுங்கி அழிக்கும் செயல் என்றால் நிச்சயம் இது கண்டிக்கத் தக்கது. தடுத்தாகவேண்டியது.
முதலாவது விஷயம் நடக்கிறதா… இரண்டாவது நடக்கிறதா..? இரண்டாவதிலும் நம் பக்கம் வெற்றி பெறுகிறதென்றால் இதை நாம் அனுமதிக்கலாம். கிறிஸ்துவும் இந்துப் பால்வீதியில் இன்னொரு குட்டி நட்சத்திரமாக ஜொலிப்பதில் நமக்கு வருத்தம் இருக்கமுடியுமா என்ன? எனவே, அதை நாம் வரவேற்கலாம். ஆனால், நாம் அழிக்கப்படுகிறோம் என்றால்?
இங்கே நமது வெற்றி நமது சுய பெருமை சார்ந்து சொல்லப்படுவதில்லை. இரண்டு கலாசாரங்களில் பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் மரபு வெல்ல வேண்டும் என்ற அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது.
நமது எதிர்பார்ப்பு என்பது இரு கலாசாரங்களின் இணைப்பு என்றால் அது இரண்டின் நன்மைகளையும் சேர்த்துக்கொண்டு புதியதாக உயர்வான ஒன்று மலரவேண்டும் என்பதுதான்.
பாரம்பரிய கர்நாடக இசைப் பாடல்களில் கிறிஸ்தவ வார்த்தைகளைச் செருகுவதைப் பொறுத்தவரையில் அது எப்போது ஆக்கபூர்வமானதாக ஆகுமென்றால் இரண்டின் உயரிய அம்சங்கள் கைவிடப்படாமல் அந்த இணைப்பு நடக்கவேண்டும்.
உதாரணமாக, இந்து மதத்தின் உயரிய அம்சம் எல்லா மதமும் உயர்வானவையே… எல்லா கடவுளும் உயர்வானவர்களே என்பது போன்ற சம தர்ம பாவம்.
கிறிஸ்தவம் இதற்கு நேர்மாறானது. அது கிறிஸ்தவமே உயர்ந்தது. கிறிஸ்துவே உயர்ந்தவர் என்று சொல்லக்கூடியது. எனவே, புதிதாக உருவாகும் பாடலானது சிவபெருமானைப் போல் ராமரைப் போல் கிறிஸ்துவும் ஒரு நல்ல கடவுளே என்று சொன்னால் அது ஆக்கபூர்வமான கலப்பு. சிவனையும் ராமரையும்விட கிறிஸ்துவே உயர்ந்தவர் என்றால் அது வீழ்ச்சி. எனவே கலப்பு சரியா தவறா என்பதை இந்த அளவுகோலின் அடிப்படையில் பார்க்கவேண்டும். இரு கலாசாரங்களின் கலப்பை எதிர்ப்பவர் சனாதனி, பழமைவாதி, அடிப்படைவாதி என்று விமர்சிப்பது தவறு.
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்து மதத்தின் அரவணைக்கும் குணமானது பன்மைத்துவத்தை மதிக்கும் மரபுகளை அரவணைக்கும் போதுமட்டுமே ஆக்கப்பூர்வமானதாக இருக்கமுடியும். வேதம், வேத மறுப்பு, ஆஸ்திகம், ந-ஆஸ்திகம் போன்ற மாறுபட்ட தத்துவப் பிரிவுகளாகட்டும், சைவம், வைணவம் உள்ளிட்ட ஆறு தரிசனங்களாகட்டும், எண்ணற்ற பக்தி மரபுகளாகட்டும் நாட்டார் வழிபாடுகளாகட்டும் இவையெல்லாவற்றையும் அரவணைக்கும் இந்துயிஸம் – இந்துத்தன்மை என்பது சில அடிப்படை நிபந்தனைகளைக் கொண்டது.
முதலாவதாக, இந்த மாறுபட்ட மரபுகள் எல்லாமும் மாபெரும் கடலில் எழும் ஓர் அலையே என்ற புரிதலில் இயங்குபவை. ஒவ்வொன்றும் தத்தமது பெருமையை முன்னிறுத்துபவைதானென்றாலும் அதற்காக பிறவற்றை அழிக்க முற்படுபவை அல்ல. எதிர்த்துப் போரிட்ட நிலையிலும் இணக்கமாக முன்னகர்வதற்கான இடத்தையும் சுதந்தரத்தையும் மறுத்தவை அல்ல. சைவ, வைணவச் சண்டைகள் நடந்தற்கு இணையாக இன்னும் சொல்லப்போனால அதைவிட வலுவாக ஹரியும் ஹரனும் ஒன்றே என்றும் சொல்லும் மரபும் வலுவாகவே இருந்திருக்கிறது.
தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களில் பன்மைத்துவம் இருப்பதுபோல் மனித நம்பிக்கைகளிலும் பன்மைத்துவத்தை இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்துத்தன்மை மூலமாக அவற்றை அரவணைப்பதென்பது மிகவும் நியாயமான இயல்பான செயலே.
ஆனால், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவை அப்படியான பன்மைத்துவத்தை ஏற்பவை அல்ல. அவற்றுடனும் சம தர்ம பாவம் காட்டுவது சரிதான். ஆனால், அது ஒருவழிப்பாதையாக இருக்கக்கூடாது. சிவபெருமானைப் போல் ராமபிரானைப் போல் கர்த்தரும் அல்லாவும் இயேசுவும் நபியும் வணங்கத் தகுந்தவர்களே என்று ஒரு இந்து சொல்லும்போது அதை நிச்சயம் ஏற்க முடியும். இஸ்லாத்தின் பெயராலும் கிறிஸ்தவத்தின் பெயராலும் உலகில் நடந்தேறியிருக்கும் வன்முறைகள், கலாசார அழித்தொழிப்புகள் ஆகியவற்றைப் புறமொதுக்கிவிட்டு இந்து மதத்தில் இருந்து அந்த மதங்களுக்குச் சென்றிருக்கும் சக இந்தியர்களின் உணர்வுகளுக்குக் கொடுக்கும் மரியாதை என்ற வகையில் அந்த மதத்தை நட்புடன் அணுகுவதில் தவறில்லை. ஆனால், நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தபடியே கை குலுக்கினால் அவரும் பதிலுக்குப் புன்னகைத்தபடியே கையை நீட்டவேண்டும். அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போக நாம் கையை நீட்டிக் கொண்டே சென்றால் அது அவமானம்.
ஒரு இந்து அரசியல்வாதி இஸ்லாமிய விழா ஒன்றில் பங்கெடுத்தால் இஸ்லாமிய அரசியல்வாதி இந்து விழாவில் பங்கெடுத்து அன்பை வெளிக்காட்டியாகவேண்டும்.
*
ஒரு கர்நாடக இசைப் பாடகர் கிறிஸ்துவைப் புகழ்ந்து ஒரு பாடல் பாட விரும்பினால் முதலாவதாக அவர் கிறிஸ்தவக் கவிஞர்கள் எழுதியிருக்கும் பாடல்களுக்கு இசை அமைத்துப் பாடுவதுதான் சரியாக இருக்கும். இந்து கவிஞர் இந்து கடவுளுக்கு எழுதிய பாடலில் இயேசுவின் பெயரை நுழைப்பது சரியல்ல.
இரண்டாவதாக, கிறிஸ்தவ கச்சேரிகளில் இந்து தெய்வங்களின் பாடலையும் அவர் பாடவேண்டும். இசைதானே அவர்களை இணைக்கிறது. அப்படியானால், ஏசுவைப் புகழ்ந்து பாடப்படும் பாடலை ரசிப்பவர்கள் சிவனைப் புகழ்ந்து பாடப்படும் பாடலையும் ரசிக்கலாமே. ஒருவேளை மாற்று மதத்துக்கு சென்றுவிட்டதால் தாய் மதத்தின் மீது சிறு விலகல் இருக்கிறது என்றால்… நல்லது, அவர்கள் சமீப கொஞ்ச காலமாக வணங்கத் தொடங்கியிருக்கும் கடவுளின் பாடலை மட்டுமே கேட்டுக்கொள்ளட்டும். ஆனால், அந்த கர்நாடக இசைப் பாடகர்கள் சிவனைப் போல், ராமனைப் போல் ஏசுவும் நபியும் எனக்கு இன்னொரு தெய்வம் மட்டுமே. அவர்கள் மட்டுமே தெய்வம் என்று நான் கருதவில்லை என்று கண்ணியமாக, தைரியமாக அந்த மேடையிலேயே சொல்லவேண்டும். புதிய எஜமானர்களுக்கு அது பிடிக்காதே என்று பயப்படக்கூடாது. அதிகார மையங்களை எதிர்க்கும் தைரியசாலி அல்லவா… தைரியமாகவே நடந்துகொள்ளவேண்டும்.
இந்து மதத்தினுள் ஓராயிரம் தெய்வங்கள் இருக்கின்றன. இந்திய மரபில் புத்தர், மகாவீரர், குருநானக் என பெரு மரபில் ஆரம்பித்து நாட்டார் தெய்வங்களாக கருப்பசாமி, ஐய்யனார், மாடன்கள், இசக்கி அம்மன்கள் என ஏராளமான தெய்வங்கள் இருக்கிறார்கள். இந்த தெய்வங்கள் மீதும் இந்து இயக்கங்கள் கர்நாடக இசையில் புதிய பாடல்களை எழுதிப் பாடவைக்கவேண்டும்.
கிராமப்புறங்களில் பெருவாரியாக வசிக்கும் தண்டு, வேர் ஜாதியினர் திரைப்பட – மெல்லிசை வடிவத்தையே பெரிதும் விரும்புகிறார்கள் என்பதால் அந்தப் பாடல்கள் அவர்களுடைய கோவில் விழாக்களில் தினமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. கர்நாடக இசையில் அவர்களுடைய தெய்வங்களுக்கான பாடல்கள் வேண்டும் என்று அவர்கள் விரும்பும்பட்சத்தில் அவற்றை மேலும் விரிவாக முன்னெடுத்துச் செல்லலாம். அதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தவும் செய்யலாம். கர்நாடக சங்கீதத்தைக் கேட்க ஒரு குறிப்பிட்ட மனநிலை தேவை. பிராமணர்களுக்கு தொடர் பாரம்பரியப் பழக்கத்தின் மூலம் கைவரப் பெற்றிருக்கும் அந்த மனநிலையை மற்றவர்களும் விரும்பும்பட்சத்தில் அதை மறுப்பது சரியல்ல.
ஏசுதாஸ் ஐப்பனைப் பற்றிப் பாடுகிறார்; எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கிறிஸ்துவைப் பற்றிப் பாடுகிறார். இது மெல்லிசைத் தளத்தில் ஆரோக்கியமான விஷயம். திரைப்படப் பாடல்களின் மெட்டுக்களில் ஐயப்பன், அம்மன் பாடல்கள் ஏராளம் உண்டு. ஒரு சனாதன மனதுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தும் என்றாலும் அதை யாரும் பெரிதாக எதிர்க்கவில்லை. ஃப்யூஷன் என்ற பெயரில் கர்நாடக, பாரம்பரிய இசைப் பாடல்கள் பல்வேறு மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வளவு ஏன், கர்நாடக இசைப் பாடலுக்கான பின்னணி இசைக்கருவியாக மேற்கத்திய வயலினைக்கூட ஏற்றுக்கொள்ளத்தான் செய்திருக்கிறோம். தியாகராஜரின் பாடலை கிறிஸ்துவின் பாடலாக மாற்றும்போதுதான் கோபம் வருகிறது. ஏனென்றால் இது இசைச் சுதந்தரம் சார்ந்த விஷயம் அல்ல. ஒரு மாபெரும் கலைஞருடைய படைப்பை அவருடைய அனுமதியின்றித் திரிக்கும் செயல். மேலும் மதம் சார்ந்த விஷயம். அதுவும் இந்து மத அடையாள அழிப்பு சார்ந்த விஷயம்.
கலைச் சுதந்தரம் என்ற போர்வையில் இதைச் செய்யவே கூடாது. ஒரு ஓவியருக்கு இந்து தெய்வத்தைத் தான் விரும்பும் பாணியில் வரைய கலை உணர்வு ஊற்றெடுக்குமென்றால் அதே ஊற்று எல்லா மத தெய்வங்களை வரைவதிலும் பீறிட்டுப் பொங்கவேண்டும். என் மதத்தில் அதற்கான சுதந்தரம் கிடையாது. எனவே என் மதத்தின் அடிப்படைவாதிகளுக்கு நான் கட்டுப்பட்டு நடப்பேன் என்று ஒருவர் சொல்வாரென்றால், அவரைப் பிற மதத்தின் அடிப்படைவாதிக்கும் கட்டுப்படுத்தும் உரிமை உண்டு. மத அடிப்படைவாதத்தை எதிர்க்க ஆர்வமுடன் ஓடோடி வருபவர்கள் இரண்டு அடிப்படைவாதத்தையும் விமர்சிக்கவேண்டும். முற்போக்கு முகமூடி கழண்டுவிடும்; புகழ், ஊடக வெளிச்சம் மங்கிவிடும்; வேறு ஆதாயங்கள் கிடைக்காமல் போய்விடும்; அடிப்பார்கள் என்றெல்லாம் பயப்படக்கூடாது.
அதோடு கர்நாடக சங்கீதப் பாடகரைக் கொண்டே கிறிஸ்தவ திரிபு வேலையை அவர்கள் முன்னெடுத்திருக்கும் நிலையில் கிறிஸ்தவ அமெரிக்க ஐரோப்பிய தேசங்களில் இந்து மரபைப் புரிந்துகொண்டு உயர்வாக மதிக்கும் நபர்களை நாம் முன்னிலைப்படுத்தவேண்டும். அப்படியானவர்களை நம் மதத்துக் கோடரிக் காம்புகளுடன் பத்து நிமிடம் பேசவிட்டால் போதும். கிறிஸ்தவ, இஸ்லாமியச் சார்புடன் பேசும் இந்து எவ்வளவு மலினமானவனாக, உள்ளீடற்றவனாக இருக்கிறான் என்பது புரியவரும்.
இந்த கலாசார, மத கலப்பு தொடர்பாக சுருக்கமாகச் சொல்வதென்றால், அது ஆத்மார்த்தமானதாக இருக்கவேண்டும். திருவள்ளுவரை ஒருவர் மதிக்கிறார் என்றால் அவர் சொன்னதை முடிந்தவரை ஏற்று நடக்க ஆரம்பிக்கவேண்டும். வெறுமனே அவர் போல் தாடி வளர்த்துப் பலனில்லை. கொடிமரம், காவி உடை, மொட்டையடித்தல், கர்நாடக இசை என இந்து அம்சங்களை நகலெடுக்கும் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தின் ஆன்மாவான பன்மைத்துவத்தை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்து கலாசாரத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் இதைக் கோரிப் பெறவேண்டும். கலைச் சுதந்தரம் என்ற போர்வையில் மலின அரசியல் செய்யவோ அபாய அரசியலின் அடியாளாகவோ இருக்கவேண்டாம். மத நல்லிணக்கம் தானே அவர்களுடைய இலக்கு. அதை முதலில் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளிடம் சொல்லிப் புரியவைக்கட்டும்.