Home Reporters Diary குடும்பத் தலைவியாக… ஒரு பத்திரிகையாளராக… இந்த லாக்டவுனில் இப்படி கழிகிறது பொழுது!

குடும்பத் தலைவியாக… ஒரு பத்திரிகையாளராக… இந்த லாக்டவுனில் இப்படி கழிகிறது பொழுது!

jayasri chari

மார்ச் 21, சனிக்கிழமை: என் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி,”நாளைக்கு நான் வரமோட்டேன், பிரதமர் ‘ஜனதா curfew’ அறிவித்து இருக்கிறார்,” என்றார். எனக்கு மனதிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. தமிழில் உள்ள வாசகத்தை ” மன்னன் எவ்வழி; மக்கள் அவ்வழி’,” நினைத்து மகிழ்ந்தேன்.

மறுநாள் மக்களின் ஒத்துழைப்போடு ‘மக்கள் ஊரடங்கு’, கொரோனாவுடன் போராடும் அனைவருக்கும் நன்றி நவிதலான கைத்தட்டலுடன் முடிவடைந்தது. நானும் என் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுடன் அதில் பங்கேற்றேன்.

அடுத்த இரண்டு நாட்களில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. முதலில் ஒருவித எதிர்ப்பார்ப்பு (காஷ்மீர் மக்கள் பெரும்பாலும் அனுபவித்ததை நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பதனால் உண்டான எதிர்பார்ப்பு), ஒருவித பயம் என விவரிக்க முடியாத ஒரு நிலமையை உணர்ந்தேன். கல்விச்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டதால், எனது குடும்ப அங்கத்தினர் அனைவரும் இல்லத்தில் ஆஜர்.

மாமனார், பெரிய பையன் ( இன்னொரு மாமனார் ரூபம்), மாமியார், கணவர் (இரண்டாவது மாமியார் அவதாரம்), இரண்டாவது பையன் ( அடுத்த நாத்தனார்) என ஐவரையும் தாக்குப் பிடிக்க என் இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரை சரணடந்தேன், ‘பொறுமையை கொடு’ என வேண்டினேன்.

‘தொலைக்காட்சி சானல்களுக்கு ஊரடங்கு உத்தரவிற்கான சிறப்புப் பட்டிமன்றத் தலைப்பாக ‘குடும்ப உறுப்பினரின் பங்கு: நன்மையா, தீமையா’, – என தயாரித்தும் வைத்தேன். ஆனால் அந்த சானல்களுக்கு என் கருத்து எட்டவில்லை! மக்களுக்கு நல்ல விஷயமே போய் சேருவதில்லை என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு!!

காலை 11.30 மணிக்கு தயிர் உறைக்குத்தி வைத்தப் பாத்திரம், மதியம் 3.30 மணிக்கு காஸ் அடுப்பில் வைக்கப்பட்டு, அதிலேயே தேநீரும் போடப்பட்டது, என் இனிய இல்லத்தில், ஒரு நாள். உபயம் : என் வீட்டு இரு மாமியார்களின் கைவண்ணம்- ஒருவர் பால் பாத்திரம் வெளியில் இருப்பதாக நினைத்து அதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க, மற்றவர், அதை எடுத்து தேநீரே போட்டு விட்டார். இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் ஓட்டு, ‘ நன்மைக்கா, தீமைக்கா?”.

நாட்கள் நகர்ந்தன. காலையில் எழுந்து அரக்கபரக்க வேலைகளை முடித்து, அலுவலகம் போகிறேன்… ஏனென்றால், குடியாட்சியின் நான்காம் தூணில் நானும் ஒரு சிறு கல். தினமும் கொரானாவைப் பற்றிய விவரங்களை எழுதிய பின், வீட்டிற்கு வந்து என்னை சுத்தம் செய்து கொண்டு, மறுபடியும் அடுப்படி.

விதவிதமாக பண்டங்களை செய்ய முடியாவிட்டாலும், அறுசுவையாக என் குடும்பத்திற்கு உணவு பரிமாறுவதில் ஒரு மகிழ்ச்சி. குழந்தைகளுடன் பொழுதை நல்ல முறையில் செலவிட முடிகிறதே என்ற திருப்தி. குறிப்பாக, கொரோனா பாதிப்பிலும் நம் நாட்டு மக்களின் உதவி புரியும் குணம், ஊரடங்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு – என்று பல நேர்மறை விஷயங்களை பகிர்வதால்… குழந்தைகளுக்கும் ஒரு நம்பிக்கை வருகிறது- நம் மக்களின் மீது.

பாதிக்கப் பட்ட மற்ற மாவட்ட, மாநில தொழிலாளர்களின் நிலமையையும் என் குழந்தைகள் பேசுகிறார்கள். பொது இடங்களில் “எச்சில் துப்பக்கூடாது” என்ற ஒழுக்கத்தை நாம் பழக்கமாக்கினால் நம் தாய் நாடு போன்ற தேசம் உலகில் இல்லை என மக்கள் உணர வேண்டும்- என பல்வேறு பயனுள்ள கருத்துக்கள் என் இல்லத்தில் அலசப்பட்டு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அனைவரும் வீட்டில் பொழுதை செலவிடும் போது நான் மட்டும் தினமும் அலுவலம் செல்ல வேண்டியுள்ளதே என ஒரு மனம் உசுப்பி விட, அதை அதட்டி, கொரானா சமயத்தில் நடக்கும் நிகழ்வுகளை சமுதாயத்திற்கு தெரிவிக்க வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி கூறிப் புறப்படு – என அறிவுறுத்தும் இன்னொரு மனதிற்கு சலாமிட்டு, நாக்பூரின் ஏப்ரல் இறுதியில் கொளுத்தும் வெயிலில் என் வெள்ளை மொபெட்டில், மாஸ்க் அணிந்து, அடையாள அட்டையை மாட்டிக் கொண்டு லாக்டவுன் பாதையில், 3- idiot கரீனா கபூர் ஸ்டைலில் பறக்கிறேன் தன்னம்பிக்கையாடு!

என் பாரத அன்னை இந்த வைரஸிலிருந்து மீண்டு வருவாள் என்று… என் பாரத மக்கள் வெற்றிகரமாக இந்த யுத்தத்தை வெல்வார்கள் என்று… என் நாட்டு front line warriors தன்னுயிரை துச்சமாக மதித்து, உலகுக்கு முன்னுதாரமாக திகழ்வார்கள் என்று…! வாழ்க பாரதம்!!

  • ஜெயஸ்ரீ சாரி (பத்திரிகையாளர், நாக்பூர்)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version