Home Reporters Diary நீறில்லா நெற்றி பாழ்… அறிவிலா தமிழ் அரசியல் பாழ்…

நீறில்லா நெற்றி பாழ்… அறிவிலா தமிழ் அரசியல் பாழ்…

நீறில்லா நெற்றி பாழ்.நெய் இல்லா உண்டி பாழ். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்…. என்பது ஔவைப் பாட்டி நமக்கு உரைத்த தத்துவம்.அவர் இன்றிருந்தால் இன்னும் ஒன்றைச் சேர்த்திருப்பார். அது எதுவெனில் அறிவில்லா தமிழ் அரசியல் பாழ் என்பதாகும்.TNA-Sampanthan-Betrayer

அரசியல் என்பது மிகவும் நுணுக்கமானது. அரசியல்வாதிகள் தம்மை முழுமையாக அரசியலுக்கு அர்ப்பணிக்க வேண்டும். சொந்த அலுவல்களில் இருந்து விட்டு அல்லது சோர்ந்து தூங்கிவிட்டு அரசியல் நடத்த முடியாது. அதிலும் தமிழர்களைப் பொறு த்தவரை ஒவ்வொரு கணப்பொழுதும் எங்களுக்கான எதிர்ப்பு அரசியல் அரங்கேறலாம்.எனவே நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

எனினும் அடுத்தவர் நமக்கு அறிவுரைப்பதா என்ற தமிழ் அரசியல்வாதிகளின் கர்வமும் அறியாமையும் சேர்ந்து தமிழ் இனத்திற்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது.

மகிந்த ராஜபக்­ விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர் தமிழ் மக்களை நசுக்குவதற்கு எடுத்த நடவடிக்கைகள் கொஞ்சமல்ல.அதன் பின்னணியில் சிங்களப் புத்திஜீவிகள் இருந்து வியூகம் அமைத்தனர்.

புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் எங்களுக்கு மான உறவை வெட்டிவிட மகிந்த அரசு கடும் முயற்சி களை மேற்கொண்டது.அதில் ஒன்றுதான் காணிப் பதிவு நடவடிக்கை ஆகும்.

காணிப்பதிவு என்பதை அரசு அறிமுகப்படுத்த, புலம் பெயர் தமிழ் உறவுகள் தாயகத்தில் இருந்த தங்கள் நிலபுலங்களைவிற்றுத்தீர்த்து தாய்மண்ணின் வேரறுத்து விடைபெற்றுக் கொண்டனர்.இந்நடவடிக்கை ஈழத்தமிழ் இனத்திற்குப் பேரிழப்பாகும்.

இவ்வாறாக ஒவ்வொரு விடயத்திலும் சிங்களப் புத்திஜீவிகளின் கருத்துரைப்புகளும் வியூகங்களும் மகிந்த அரசினால் அமுல்படுத்தப்பட்டது.

ஆனால், தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புத்திஜீவிகள் ஒன்றிணைந்த அணி ஏதும் உண்டா? என்றால் இல்லவே இல்லை.

தமிழ்ப் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து தமிழ் இனத் திற்கு சாதகமான வியூகங்களை அமைத்து, அதன் ஊடாக தமிழ் அரசியல் தலைமைகளை வழிப்படுத்த வேண்டும்.

எனினும் ஈழத்தமிழர்களின் முதலாவது புத்திஜீவி சம்பந்தர் என்பது போலவும், சம்பந்தர் எடுக்கும் தீர்மானங்களுக்கு மாற்றுத் தீர்மானம் இல்லை என்பது போன்றதுமான நிலைமை இங்கு உள்ளது.

இதனால் தனிமனிதத் தீர்மானம் எங்கள் இனத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதற்கு நல்ல உதாரணம் கிழக்கு மாகாண சபை விவகாரமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாண விடயத்தை தான் கையாளாமல் தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் கையளித்தார். இது மைத்திரியின் புத்திசாலித்தனம்.

இப்போது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமதாக்கிக் கொண்டார். சம்பந்தர் படுதோல்வி கண்டார்.

தோல்வி வயப்பட்டவர் விடக்கூடிய அறிக்கையை சம்பந்தர் விட்டாராயினும் அந்த அறிக்கையின் காரம் மிகக் கம்மியாக இருந்தது என்பதையும் இங்கு கூறித்தான் ஆகவேண்டும்.

இதைவிடப் படுமோசமான விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்ததுதான்.

ஆக, சிங்களப் பேரினவாதத்தோடு பேச்சுநடத்தி உரிமை பெறவேண்டிய நிலைமையில் இருக்கும் தமிழ் இனம் தன்னிலும் சிறுபான்மையான முஸ்லிம் இனத்துடனும் பேசி அவர்களிடம் இருந்து பதவி பெறவேண்டிய பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளது. இங்குதான் அறிவில்லா தமிழ் அரசியல் பாழ் என்பது நிஜப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” நாளிதழின் ஆசிரியர் தலையங்கம். (12.02.2015)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version