தமிழகம் கேரளாவில் கொரோனாவுக்கு முன்பு இயக்கிய பாசஞ்சர் ரெயில்கள் சிறப்பு எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்குவதை தவிர்த்து மீண்டும் பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .கொரோனாவால் நிறுத்தப்பட்ட அனைத்து பாசஞ்சர் ரயில்களை உடன் இயக்கவும் புதிய வழித்தடங்களில் ரயில்களை புதிதாக இயக்க வரும் பயணிகள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் முற்றிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், ரெயில்வே துறையில் மட்டும் கொரோனாவுக்கு பின்னரும் வழக்கமான ரெயில் சேவைகள் தொடங்கப்பட வில்லை. இதுகுறித்து தென் மாநிலங்களில் பயணிகள் தரப்பில் கூறப்படுவதாவது:-
தென்னக ரெயில்வேயில் குறிப்பாக, தமிழகத்தில் கேரளாவில் கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும். கொரோனாவுக்கு முன்னர் நின்று சென்ற ரெயில் நிலையங்களில் வழக்கமான ரெயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும். ஏற்கனவே இயக்கப்பட்ட பயணிகள் ரெயில்கள் அனைத்தும் தற்போது பயணிகள் ரெயில் போல அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றன. ஆனால், எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரெயில்வே வாரியத்தின் புதிய கொள்கைப்படி 200 கி.மீ தூரத்திற்குள் இயக்கப்படும் ரெயில்களை பயணிகள் ரெயில்களாக மட்டும் இயக்க வேண்டும்.
அதன்படி, மதுரை-செங்கோட்டை இடையே 173 கி.மீ. தூரம் மட்டுமே உள்ளது. மதுரை-ராமேசுவரம் இடையே 162 கி.மீ., மதுரை-பழனி இடையே 120 கி.மீ., பழனி-கோவை இடையே 109 கி.மீ., நெல்லை-திருச்செந்தூர் இடையே 61 கி.மீ., நெல்லை-தூத்துக்குடி இடையே 60 கி.மீ., நெல்லை – செங்கோட்டை இடையே 72 கி.மீ., திண்டுக்கல்-திருச்சி இடையே 95 கி.மீ., விருதுநகர் – காரைக்குடி இடையே 128 கி.மீ., காரைக்குடி-திருச்சி இடையே 89 கி.மீ. தூரம் உள்ளது. ஆனால், இந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. மதுரை-பழனி-பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் தற்போது மதுரையில் இருந்து கோவைக்கு பெயரளவுக்கு ஒரேயொரு ரெயில் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
தற்போது தமிழகம் கேரளா வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, புதிய ரெயில்வே கொள்கையின்படி, இணைப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, வ.எண்.22670/22669 கோவை-தூத்துக்குடி-கோவை (நாகர்கோவில்-கோவை இணைப்பு ரெயில்), வ.எண்.16129/16130 சென்னை எழும்பூர்-தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (குருவாயூர் இணைப்பு ரெயில்) ஆகிய ரெயில்களுக்கு பதிலாக மாற்று ரெயில்கள் இயக்கப்படமால் உள்ளன. இந்த ரெயில்களுக்கான பெட்டிகள் அனைத்தும் வெவ்வேறு ரெயில்களில் இணைக்கப்பட்டும், ஒரு சில ரெயில்களின் பெட்டிகள் மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட ரெயில்வே பணிமனைகளில் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
வண்டிஎண். 52821/56825-56822/56826 மயிலாடுதுறை/ஈரோடு-நெல்லை-மயிலாடுதுறை/ஈரோடு ,வ.எண். 56733/56734 மதுரை-செங்கோட்டை-மதுரை உட்பட பல ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.இந்த ரயில்களை உடன் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக கோவை மேட்டுப்பாளையம், தென்காசி மதுரை வழியாக சென்னை, பெங்களூரு, மதுரையில் இருந்து தென்காசி புனலூர் வழியாக மங்களூரு,குருவாயூர்க்கு ரயில்களை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்
