

சின்னசேலம் அருகே தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் இன்று கலவரமாக மாறியது. அந்த தனியார் பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பஸ்களுக்கு தீ வைத்தனர். அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ,மாணவிகளின் சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகின.
கள்ளக்குறிச்சி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக அந்த பள்ளியில் படித்து வரும் ஏறக்குறைய 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி மீதான தாக்குதலை கண்டித்து திங்கள்கிழமை காலை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்கள், நிர்வாகிகள், கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், மருத்துவமனைக்கு அளிக்கப்படுவதைப் போன்று தனியார் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு 2 நாட்களுக்குள் உரிய முடிவை அறிவிக்கா விட்டால் தனியார் பள்ளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிபிஎஸ்சி கல்வி முறையில் இயங்கும் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் உள்ள 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளால் மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை கூடாது: தமிழக அரசு
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
கனியாமூர் பள்ளி வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல பள்ளிகள் செயல்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரக இயக்குநர் கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார்.