கேரள மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.இன்று 21வகை காய்கறி பதார்த்தங்களுடன் பரிமாறப்படும் திருவோணம் விருந்து சிறப்பு வாய்ந்ததாகும்.
மகாபலி சக்கரவர்த்தி தன் தேசத்து மக்களை பார்க்க வருவதாக கருதப்படும் இந்த நாளில் அவரை வரவேற்கும் விதமாக 9 நாட்களாக வீடுகளின் முன்பு பூக்களால் கோலமிட்டனர்.
திருவோண நாளான இன்று மலையாள தேசத்து மக்கள் வீடுகளில் சந்தோசம் பொங்கும். காலையில் எழுந்து குளித்து ஆண்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையும், பெண்கள் ஜரிகை போட்ட வெள்ளை சேலையும் அணிந்து கோவிலுக்கு சென்று வருவார்கள்.
அதன்பிறகு வீடுகளில் ஓண விருந்து தயாராகும். முழுக்க முழுக்க சைவத்தில் தயாராகும் இந்த உணவில் 21 வகை உணவுகள் இடம் பெறும். குறிப்பாக ‘ஓலன்’ எனப்படும் பூசணிக்காய், காராமணி, தேங்காய் கலந்த தொக்கு, காளன் எனப்படும் சேனைக் கிழங்கில் தயாராகும் ஒருவித தொக்கு, எட்டுவிதமான காய்கறிகளை தேங்காய் கலந்து வேக வைத்து தயிர் கலந்து தயாரிக்கப்படும் அவியல், இஞ்சிபுழி, ஊறுகாய், தக்காளி பச்சடி, பொரியல்கள், சிப்சில் வெல்லம் கலந்தது உள்பட 3 வகை உள்பட கூட்டு வகைகள்.
பருப்பு, சாம்பார், ரசம், மோர், இருவகை அப்பளங்கள், அடை, பருப்பு, தேங்காய் பால் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் 3 வகை பாயாசங்கள் உள்பட 21 வகை உணவுகள் இடம்பெறும்.
விருந்து தயாரானதும் முதலில் வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டு இருக்கும் விளக்கின் முன்பு படையலிடப்படும். பின்னர் அனைவருக்கும் பரிமாறப்படும்.
ஒவ்வொருவருக்கும் தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறுவார்கள். சென்னையில் வசிக்கும் கேரள மக்கள் விருந்து தயாரிப்பதற்கான பொருட்களை இன்று ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.திருவோணம் விருந்து ஒவ்வொரு மலையாளிகள் வீடுகள் தோறும் குருவாயூர் சபரிமலை ஆரண்முழா புனலூர் அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலில் விமர்சையாக நடைபெறும்.