இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கால்நடைகளை குறிவைத்து வேகமாக பரவும் லம்பி வைரஸ் தொற்றால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்தியாவில் லம்பி வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன. குறிப்பாக பசுக்களை இந்த வைரஸ் தாக்கி வருகிறது. இது தற்போது பல்வேறு மாநிலங்களுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடைகள் ஏற்றுமதியை குஜராத் அரசு தடை செய்துள்ளது. தற்போது வரைக்கும் பால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் கால்நடைகளை இந்த லம்பி வைரஸ் அதிகளவில் பாதித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பசுக்களை குழி தோண்டி புதைத்து வருகின்றனர். தற்போது வரைக்கும் நாடு முழுவதும் 57,000த்துக்கும் மேலான பசுக்கள் இந்த வைரஸ் நோயால் இறந்துள்ளன. இவற்றில் 37 ஆயிரம் பசுக்கள் ராஜஸ்தானில் மட்டும் இறந்துள்ளன.
இதுகுறித்து மத்திய மீன்வளம், விலங்குகள் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் கோடாபாய் ருபலா கூறியுள்ளதாவது,
தற்போது லம்பி வைரஸ் நாட்டில் 6 முதல் 7 மாநிலங்களில் பரவி இருக்கிறது. முக்கியமாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவி இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்திலும் சில பசுக்களை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாநிலங்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
பசுக்களை வைத்து இருப்பவர்கள் தங்களது பசுக்களுக்கு கோட் பாக்ஸ் தடுப்பூசிகளை (Goat Pox Vaccine) செலுத்திக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளை இந்த தடுப்பு ஊசி போடுவதற்கு துரிதப்படுத்தி வருகிறோம். குஜராத் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது.
பஞ்சாப், அரியானா மாநிலங்களில் தொற்று பரவுவது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அதிகளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.
இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் லம்பி வைரஸ் தொற்று நோயை தேசிய பேரழிவு நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு கால்நடைகள் ஏற்றுமதியை குஜராத் அரசு தடை செய்துள்ளது. தற்போது வரைக்கும் பால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மிகவும் மோசமான இந்த வைரஸ் கால்நடைகளுக்கு பரவுகிறது. இது ஒரு விலங்கிடம் இருந்து மற்ற விலங்குகளுக்கு ஈக்கள், சிறு பூச்சிகள், கொசுக்கள், உண்ணிகள் மூலம் பரவுகின்றன.
இதனால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு காய்ச்சல், தோலில் முடிச்சுகள், கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடிதல், பால் சுரப்பது குறைதல், சாப்பிடுவதில் சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. இவை தவிர முகம், கழுத்து, வாய், மூக்கு கண் இமைகள் ஆகியவற்றில் கட்டிகள் ஏற்படும்.
இத்துடன் கால்களில் வீக்கம், நடையில் தடுமாற்றம், நடப்பதை குறைத்துக் கொள்வது போன்ற சிக்கல்கள் ஏற்படும். நோய் பெரிய அளவில் தாக்கி முற்றும்போது, பசுக்கள் இறக்கின்றன. இந்த நோயினால் பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு கருக்கலைப்பும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இந்த லம்பி வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்று உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நல அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.