திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் மன்னரின் உடைவாள் முன் செல்ல சுவாமி சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன் பிறகு 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் ஆட்சி காலத்தில் இந்த விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சிலைகளை பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக கொண்டு செல்வார்கள். அப்போது மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் உடைவாளும் கொண்டு செல்லப்படும். சாமி சிலைகள் புறப்பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெறும். பாரம்பரிய முறைப்படி பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும் சுவாமி சிலைகள் ஊர்வலம் புறப்படும் இடத்தில் இருந்து கேரள மாநில எல்லை வரை பொது மக்கள் திரண்டு நின்று பூப்பந்தல் மற்றும் அலங்கார வளைவுகள் அமைத்தும். மின் விளக்குகளால் அலங்கரித்தும் வரவேற்பு கொடுப்பார்கள். தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் சாமி சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும்.
இதில் தமிழக-கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இந்த சாமி சிலைகள் ஊர்வ லத்தில் யானையும் பயன் படுத்தப்படும். பின்னர் சாமி சிலை களை மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு. இந்த ஆண்டு நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி நேற்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலத்துடன் புறப்பாடு வியாழக்கிழமை நடைபெற்றது
இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதனால் தினமும் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிறகு பல்லக்கு வாகனத்தில் அம்மன் காலை 8.25 மணிக்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இருமாநில போலீசார் மரியாதை அப்போது தமிழக-கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பிறகு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 4 ரத வீதிகளிலும் அம்மன் ஊர்வலம் நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவிளக்கேற்றி திருக்கனம் சாத்தி அம்மனுக்கு மலர்தூவி வழி அனுப்பினர். ஊர்வலத்தின் பின்னால் தமிழக மற்றும் கேரளா அரசு சார்பில் தீயணைப்பு வாகனங்களும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் அணிவகுத்தபடி சென்றன. அம்மன் ஊர்வலம் ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக மாலை 6.35 மணிக்கு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை சென்றடைந்தது.
இன்று குமாரகோவில் முருகன் கோவில் வந்தடைந்தது. பின்னர் இன்று காலை பூஜைகள் முடிந்து முன்னுதித்த நங்கை அம்மனுடன் குமாரகோவில் முருகனும் பல்லக்கில் பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவில் வந்தடைந்தது.

தொடர்ந்து கேரள அரசின் பாரம்பரிய மரியாதையுடன் கேரள போலீசார்அணிவகுப்பு மரியாதையுடன் பத்மனாபபுரம் அரண்மனை முன்பு வந்தடைந்தது. அப்போது அங்கு பூசாரிகள் மூலம் பிடிகாணிக்கை வழங்கபட்டது. பின்னர் அரண்மனையில் உள்ள உப்பரி மாளிகையில் பாதுகாக்கப்பட்ட மன்னர் பயன்படுத்திய உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜைகளுக்கு பின்னர் அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் உடைவாளை எடுத்து கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.
அந்த உடைவாளை அவர் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார். அவர் குமரி மாவட்ட இணை ஆணையர் ஞானசேகரிடம் வழங்கினார். பின்னர் இது அரண்மனை ஊழியர் சுதர்சனிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து அரண்மனை ஊழியர் உடைவாளுடன் முன் சென்றார். யானையில் சரஸ்வதி அம்மன், 2 பல்லக்கில் முன்னுதித்த நங்கையம்மன், முருகன் ஆகியோர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
இந்த நிகழ்ச்சிகளில் கேரளா பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் குமாரகுருபரன், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலமாக சென்ற சுவாமிகளை வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நின்று வழிபட்டனர். இன்று கேரளபுரம் திருவிதாங்கோடு வழியாக ஊர்வலம் குழித்துறை செல்கிறது. அங்கு தங்கிவிட்டு நாளை காலை சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு தமிழக எல்லையான களியக்காவிளை செல்கிறது. அங்கு கேரள மாநில அரசு முறைப்படி மரியாதை செலுத்தப்பட்டு நெய்யாற்றின் கரையில் தங்க வைக்கபடுகிறது. தொடர்ந்து புறப்பட்டு திருவனந்தபுரம் ஆரிய சாலையில் வந்தடைகிறது. அங்கு 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்கிறது. 10 நாள்கள் பூஜை முடிந்து அங்கிருந்து சாமி சிலைகள் மீண்டும் புறப்பட்டு குமரி வந்தடைகிறது
