
எங்களது துன்பமெல்லாம் முடியும் என்றிருந்தோம். ஆனால், எங்கள் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டது என்று கண்ணீர் விட்டார் கேரளத்தில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களில் பத்மம் என்பவரின் மகன்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் செல்வ வளம் பெருக வேண்டும் என்பதற்காக பில்லி சூனியம் செய்து 2 பெண்களை நரபலி கொடுத்த புகாரின் பேரில் தம்பதி உள்பட மூவா் கைது செய்யப்பட்டனா்.
தாய்க்கு நேர்ந்த துயரத்தை அறிந்து கேரளம் வந்திருக்கும் பத்மம் என்பவரின் மகன் செல்வராஜ் கூறுகையில், ஒரு மாதத்தில் தருமபுரி வந்து எங்களுடன் தங்கியிருக்கப் போவதாக எனது தாயார் கூறினார். ஆனால் இப்போதோ அவரது உடலைக் கூட எங்களால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில உடல் பாகங்களைக் காட்டி அது எனது தாயுடையதா என்று கேட்கிறார்கள். ஒரு மகனாக அதனை எப்படி என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியும்? நான் அதை பார்க்கக்கூடவில்லை. எனது மூளையே காலியாகிவிட்டது போல உணர்கிறேன் என்கிறார்.
நானும் என் சகோதரனும் எம்எஸ்சி முடித்துவிட்டோம். நான் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளேன். சகோதரன் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். எங்களது துக்கம் எல்லாம் முடிவுக்கு வரப்போகிறது என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்களது மகிழ்ச்சிதான் முடிவுக்கு வந்துள்ளது. என் தாய் இல்லாமல் இப்போது எப்படி வீட்டுக்குச் செல்வேன். நாங்கள் படித்து வேலைக்குச் சென்றதெல்லாம் எங்கள் தாயை காப்பாற்றவே.. ஆனால் இப்போது அவரே இல்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மாநில காவல் துறை ஐஜி (தெற்கு மண்டலம்) பி.பிரகாஷ் கூறியதாவது: சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த பத்தினம்திட்டா மாவட்டம் கதவன்தாரா மற்றும் கலடி பகுதிகளைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அவா்களின் உடல்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு திருவல்லாவில் எலந்தூா் கிராமத்தில் இரண்டு இடங்களில் புதைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் தொடா்பாக திருவல்லாவைச் சோ்ந்த மசாஜ் சிகிச்சையாளா் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பகவல் சிங், அவருடைய மனைவி லைலா மற்றும் பெரும்பவூரைச் சோ்ந்த ரஷீத் (எ) முகமது சஃபி ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக இரு பெண்களையும் திருவல்லாவில் தம்பதியின் வீட்டில் வைத்து கொலை செய்து எலந்தூா் கிராமத்தில் புதைத்திருப்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட பெண்களை இந்தக் கிராமத்துக்கு எப்படி அழைத்து வந்தனா் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து தொடா் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.