
செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கனஅடி நீர் வெளியேற்றபடுவதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரியில் இருந்து கடந்த காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
22 அடியில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 22 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இந்நிலையில், இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்து நீர்வரத்து அதிகரித்த பட்சத்தில் ஏரியில் இருந்து நண்பகல் 2000 கனஅடி நீர்வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு 3000 கனஅடி நீர் வெளியேற்றபடுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4,297 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் கொள்ளளவு 3,241 மில்லியன் கனஅடியாகவும் நீர்மட்டம் 22.47 கனஅடியாகவும் உள்ள நிலையில் தற்போது 3000 கனஅடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.