
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, மாநகர போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் இறை தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் கந்தசஷ்டி, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் போன்ற திருவிழாக்களுக்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி எவ்வித அசம்பாவிதமுமின்றி சிறப்பாக நடத்தியது.
இது போல வைகுண்ட ஏகாதசி விழாவையும் சிறப்பாக நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 இணை ஆணையர்கள், 5 உதவி ஆணையர்கள், வைணவ திருக்கோயில்கள் அல்லாத பிற கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு நாளை முதல் திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் எளிய முறையில் தரிசனம் செய்திட வசதியாக ஒழுங்குப்படுத்தும் பணியினை மேற்கொள்வார்கள்.
வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியான இன்றைய கூட்டத்தில் பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய வரிசைமுறை நீட்டிக்கவும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, 20 இடங்களில் தற்காலிக கழிப்பிட வசதிகள், 4 இடங்களில் மருத்துவ முகாம்களும், 2 இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்களும், அவசர ஊர்திகளும் ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் மூலம் சுழற்சி முறையில் 150 தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி தூய்மை பணிகள் மேற்கொள்ளவும், காவல் துறையின் மூலம் பாதுகாப்பு பணியில் 1500 காவலர்களை கொண்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், தீயணைப்பு காவலர்களுடன் 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மாடவீதிகளை சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. என்.கே.டி. பள்ளி மற்றும் வெலிங்டன் பள்ளி வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி நாளன்று பக்தர்களுக்கு லட்டு மற்றும் கற்கண்டு பிரசாதமாக வழங்கப்படும். திருக்கோயில்கள் மூலம் செய்யப்பட்டுள்ள இத்தகைய வசதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார்.இக்கூட்டத்தில் சென்னை மண்டல இணை ஆணையர் கே.ரேணுகாதேவி, காவல் உதவி ஆணையர் சார்லஸ் சாம் ராஜதுரை, ஜெ.சிவகுமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
