செகந்திராபாத் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்து – ட்ரோன் கேமரா மூலம் 3 உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
செகந்திராபாத் 5 அடுக்கு கொண்ட டெக்கான் மாலில் வியாழக்கிழமை திடீரென கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 20 மணி நேரம் கழித்துதான் தீ கட்டுக்குள் வந்தது.
அதற்குள் அந்த 5 அடுக்குமாடி முழுவதும் தீயால் சேதமடைந்தது. கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதையடுத்து சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டுள்ளன.
மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாலும் கட்டிடம் கருகி புகை மூடி கிடப்பதாலும் கட்டிடம் முழுவதும் அனல் பறப்பதாலும் தீயணைப்புப் படையினர் உள்ளே செல்லவில்லை.
இதையடுத்து ஷாப்பிங் மாலில் பணியாற்றியவர்களில் யார் யார் காணவில்லை எனும் கணக்கெடுப்பு நடத்தியதில், குஜராத் சோம்நாத் மாவட்டம், பெராவல் கிராமத்தை சேர்ந்த ஜுனைத் (25), ஜாகீர் (22), வாசீம் (32) ஆகிய 3 பேரை காணவில்லை என தெரிய வந்தது. அவர்களை ட்ரோன் கேமரா மூலம் தீயணைப்பு படையினர் தேடினர். அப்போது கட்டிடத்துக்குள் கருகிய நிலையில் 3 உடல்கள் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தீயணைப்பு படை அதிகாரி தர் கூறுகையில், ‘‘சட்டவிரோதமாக இந்த மாலில் குடோன்கள் செயல்பட்டதால்தான் தீ விபத்துக்கு காரணம் என கூறலாம். கட்டிட உரிமையாளர் ஜாவீத் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடி வருகின்றனர்’’ என்றார்.