25 வயதில் உயர் நீதிமன்ற நீதிபதியான பட்டியலினப் பெண் காயத்ரி குக் குவியும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வருகின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு விதான செளவுதா சட்டப்பேரவைக்கு அருகே, கர்நாடக உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. இதில், சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வில், கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி – வெங்கடலட்சுமி தம்பதியின் மகள் காயத்ரி (25) பங்கேற்றார்.
இந்நிலையில், சிவில் நீதிமன்ற நீதிபதி பதவியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், காயத்ரி தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். விரைவில் சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
இளம் வயதிலேயே உயர் நீதிமன்ற சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள காயத்ரி, பங்காருபேட்டை அருகேயுள்ள காரஹள்ளியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்.
பின், கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தராய்யா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் பல்கலைக்கழக அளவில், 4வது இடத்தை பிடித்து தேர்வாகியிருந்தார். தனது கடுமையான உழைப்பு, விடா முயற்சியால் சிறு வயதிலேயே பெரும் பொறுப்புள்ள பதவியை பெற்றுவிட்டார்.
ஏழ்மையான குடும்பம், பட்டியலின சமூக பின்புலத்துடன் வெற்றி மட்டுமே இலக்கு என அனுதினமும் போராடி வென்று, இளம் நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள காயத்ரி, சட்டப்படிப்பு படிக்கும் பலருக்கும் ரோல் மாடல் ஆகியுள்ளார். காயத்ரியை நாடு முழுவதிலும் உள்ள மக்களும், சட்டத்துறையை சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.