
மாவட்ட தலைநகரான விருதுநகரில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் இங்கு பிரதான குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏறப்ட்டுள்ளதால் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.
விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருவது ஆணைக்குட்டம் நீர்த்தேக்கம். இங்கிருந்து விருதுநகர் நகராட்சி பகுதியில் வசிக்கும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியிலிருந்து நாள்தோறும் சராசரியாக 30லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு பிரதான குழாய்கள் வழியாக விருதுநகரில் மதுரை சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில், விருதுநகரில் உள்ள பழைய சிவகாசி சாலை முதல் புதிய சிவகாசி சாலை இணைப்பு வரை 5 இடங்களில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 2லட்சம் லிட்டர் குடிநீர் வரை வீணாகி வருகிறது.
இந்த உடைப்புகளை சீர் செய்யக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன காரணத்தினாலோ, இதுவரை எவ்வித நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால், குடிநீர் தினசரி வீணாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.
எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக விருதுநகரில் உள்ள பழைய சிவகாசி சாலையில் உள்ள குழாய் உடைப்புகளை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இதுபோன்ற பிரச்சினை தலைவிரித்தாடும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து சீரானா குடிநீர் மக்களுக்கு வழங்க பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்