அருணாச்சலப்பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த விமானி தேனியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அருணாசலப்பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோருடன் சங்கே கிராமத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டு அசாமின் சோனிப்பூர் மாவட்டத்தில் மிசாமாரி நோக்கி சென்றது. காலை 9.15மணிக்கு விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மேற்கு கமேங் மாவட்டத்தில் உள்ள மண்டாலா அருகே போம்டிலாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவரும் உயிரிழந்னர். விபத்தில் இறந்த விமானிகள் லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என அடையாளம் காணப்பட்டது. இதில் மேஜர் ஜெயந்த் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.
இவர்களது உடல்கள் டெல்லி விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னர் லெப்டினன்ட் ரெட்டியின் உடல் ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேஜர் ஜெயந்த் அவர்களின் உடல் தேனி மாவட்டத்திற்கு திருச்சி செல்லும் விமானம் மூலமாகவோ மதுரை செல்லும் விமானம் மூலமாகவோ கொண்டு வரப்பட உள்ளது. அங்கிருந்து மாவட்ட ஆட்சியர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர்,சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு தேனி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.