விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாதுகாப்பாக குடோனில் வைப்பதற்கு பெட்ரோலியத் துறை உள்ளிட்ட நான்கு வகையான துறைகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.குறிப்பாக சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கு தனிப்பட்ட குடோன்களை அமைக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளது.இதனை பின்பற்றாத ஒரு சிலர் மாநிலம் முழுவதும் முறைகேடாக சிலிண்டர்களை பதுக்கி வைத்து வினியோகம் செய்து வந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வழியாக வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படும் சுமார் 288 இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கடத்திவரப்பட்டு ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் உள்ள அரசியார்பட்டியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எந்த விதமான அறிவுரைகளும் பின்பற்றாமல் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சிலிண்டர்களை பறிமுதல் செய்து குடோனின் உரிமையாளர் மலைக்கனி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலிண்டர்களும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.