
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் இருக்கிறது’ எனப் பேசினார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ., புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, ‘பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் குற்றவாளி. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கினார்.
மேலும், 10 ஆயிரம் பிணையில் அவருக்கு ஜாமின் வழங்கியதுடன், இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டு உள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் மேற்கு மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் கும்பகோணம் மாநகரத் தலைவர் மிர்சாவூதீன்பொ துக்குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட காங்கிரஸ் கட்சியிரை கைது செய்தனர்.
இதனால் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மறியலுக்கு பிறகு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரசார் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில்வே நிலைய நுழைவாயில் முன்பு பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். ரெயில்வே நிலையத்தை சுற்றிலும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.