
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெண்ணை கொலை செய்த நாகராஜ்(26), அழகுபட்டு(36) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ராஜபாளையம் இ.எஸ்.ஐ., காலனியை சேர்ந்தவர் ரமணி(38). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன்(30), அழகுபட்டு(36) ஆகியோர் கடன் வாங்கி இருந்தனர். இந்நிலையில் சங்கரசுப்பிரமணியன் பணத்தை திருப்பி தராததால் அவரது வீட்டில் இருந்த பொருட்களை ரமணி எடுத்து சென்றார்.
இதையெடுத்து இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி சங்கரசுப்பிரமணியன், அழகுபட்டு, பட்டமுத்து, நாகராஜ் ஆகியோர் ரமணியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது சங்கரசுப்பிரமணியம், பட்டமுத்து ஆகியோர் உயிரிழந்து விட்டனர். இந்த வழக்கில் நாகராஜ், அழகுபட்டு ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.