
சபரிமலை யாத்திரையின்போது நேற்று விபத்துக்குள்ளான தமிழக பேருந்து பள்ளத்திலிருந்து க்ரைன் மூலம் இன்று தூக்கப்பட்டது மற்றும் பக்தர்களின் உடைமைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரைக்கு வந்த 64 சுவாமிமார்களை ஏற்றிச் சென்ற பஸ் இளவுங்கல் அருகே தரிசனம் முடித்து திரும்பும் போது செவ்வாய் கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பத்தனம்திட்டா மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் தலைமையில், போலீசார், தீயணைப்பு படையினர், மோட்டார் வாகன துறையினர், வருவாய்த்துறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறையினர், அந்த வழியாக மற்ற வாகனங்களில் வந்த அப்பகுதி மக்கள், சுவாமிகள் ஆகியோர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விரைவாக செயல்பாட்டு பேருந்தில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரத்தில் வெளியே எடுக்கப்பட்டு, பலத்த காயமடைந்தவர்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கும், மற்றவர்கள் பத்தனம்திட்டா பொது மருத்துவமனைக்கும், மற்ற பயணிகளை நிலக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் முதலுதவி சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
கேரள முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி பக்தர்களின் சிகிச்சை, உணவு, உடை என அனைத்துத் தேவைகளையும் கருத்தில் கொண்டு மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேவஸ்வம் அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், ரன்னி எம்.எல்.ஏ., கோன்னி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் காயம் அடைந்த சுவாமிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தமிழக மாவட்ட நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது
காயமடைந்த முதியவர்கள், குழந்தைகள் அடங்கிய குழுவில் சுவாமிகளிடம் பத்தனம்திட்டா ஆட்சியர் திவ்யா ஐயர் விசாரணை நடத்தி ஆறுதல் கூறினார்.