சென்னையில் நங்கநல்லூர் தரமலிங்கேஸ்வரர் கோயில் திருவிழா தீர்த்தவாரியின் போது 5 பேர் பலியான குளத்தில் இறங்க தடை- கோவில் தரிசனம் ரத்து.கடந்த 3 ஆண்டுகளாக கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வந்து உள்ளது. முதல் ஆண்டு மட்டும் உரிய பாதுகாப்பு நடைமுறை கடைபிடிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த நங்கநல்லூர், எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக கோவிலில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடத்த திட்டமிட்டு இருந்தனர். அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உற்சவர் சாமி சிலையுடன் குளத்திற்குள் சென்று நீராடினர். அப்போது அர்ச்சகர்களுக்கு பாதுகாப்பு அரணாக சங்கிலிபோல் கைகோர்த்து நின்ற தன்னார்வலர்களில் ஒருவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.
அவரை காப்பாற்ற முயன்ற அருகில் நின்ற 4 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதில் நங்கநல்லூரை சேர்ந்த வனேஷ் (வயது 19), புழுதிவாக்கம் முத்து முகமது தெருவை சேர்ந்த ராகவ் (19), புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ராகவன் (22), நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சூர்யா (22), மடிப்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (23) ஆகிய 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த துயர சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் ஆறுதல் கூறினர். கோவில் குளத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
பலியானவர்களில் வனேசும், ராகவனும் சி.ஏ.மாணவர்கள், ராகவ் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வந்தார். சூர்யா தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் கலைஞராக வேலை பார்த்தார். யோகேஸ்வரன் ஒரகடத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பலியானவர்கள் தண்ணீரில் மூழ்கும் வீடியோ காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக இந்த கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வந்து உள்ளது. முதல் ஆண்டு மட்டும் உரிய பாதுகாப்பு நடைமுறை கடைபிடிக்கப்பட்டது.
பின்னர் 2 ஆண்டுகளும் உரிய விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தீர்த்தவாரியின் போது 5 பேர் பலியான கங்கையம்மன் கோவில் குளத்தில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. குளத்திற்கு செல்லும் குளத்தின் முன்பகுதி கேட் மூடப்பட்டு உள்ளது. அதில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பங்குனி உத்திர விழா நடைபெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் நிறுத்தப்பட்டு உள்ளது.
கோவில் நடை சாற்றப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கிறது. அதில், தவிர்க்க முடியாத காரணத்தால் பொது தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். கோவில் குளத்தில் 5 பேர் பலியான விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் சட்டப் பேரவை கூட்டத்தில் இன்று இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும், நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உயிரிழந்த ஐந்து பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்:
அப்போது பேசிய அவர், “திருக்கோயில்களுக்குச் சொந்தமான குளங்களையும், திருக்கோயில் நிகழ்ச்சிகள் நடைபெறும் குளங்களையும் தூர்வாரும் பணிகளை உடனடியாக இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் இளம் வயதிலே இறந்த ஐவருக்கும் அரசு அறிவித்த நிவாரணம் போதாது. நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இதுபோலவே விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருள்மிகு முருகர் திருக்கோயிலில் நாராயணன் என்ற 45 வயது பக்தர் ஒருவர், அங்குள்ள குளத்தில் குளித்தபோது மூழ்கி இறந்துவிட்டார். அவர் குடும்பத்துக்கும் அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும், அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சர்வ மங்கள சேவா என்னும் சங்கம்தான் இந்தக் கோயிலை நிர்வகித்து வந்தது. இந்த நிகழ்வு நடந்தவுடன் முதலமைச்சர் அழைத்து ‘பூஜை நடக்கும்போது குளங்கள் ஏன் தூர்வாரப்படவில்லை’ என்னும் கேள்வியைக் கேட்டார். கோயில் நிர்வாகம் இப்படி ஓர் உற்சவம் நடப்பது குறித்து அறநிலையத்துறைக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. எனினும் இதைக் குறையாகச் சொல்லாமல்… இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெவித்துக்கொள்கிறேன். முதலமைச்சர் நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் கேட்கும் நிவாரணங்களைச் செய்துதர அரசு தயாராக இருக்கிறது” என்று கூறினார்.