மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக, மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதும், இந்தப் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதும் இப்போது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
சேலம் மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர்(பொறுப்பு) அசோக்குமார், துணை மேயர் சாரதா தேவி முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில், பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்குமாறு திமுக., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். முதல்வர் ஸ்டாலினால் வருகின்ற 11-ஆம் தேதி திறக்கப்பட உள்ள வணிக வளாகங்கள் குறித்தும், நலத்திட்ட உதவிகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சி தலைவர் ஜெயக்குமார், சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கு ‘‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஈரடுக்கு பேருந்து நிலையம்‘”’ என்றும், வணிக வளாகத்திற்கும் கருணாநிதி பெயரையே வைத்தும் அவசர தீர்மானம் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் கூட்டத்தில் நிறைவேறியது.
ஆளுங்கட்சியினரின் இந்த அவசரத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக., எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, கே.சி.செல்வராஜ், ஜனார்த்தனன், சந்திரா, மோகனபிரியா உள்ளிட்ட 6 அதிமுக., கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதுகுறித்து அதிமுக., எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர் யாதவமூர்த்தி கூறும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரடுக்கு பேருந்து நிலையம், வணிக வளாகம் உள்ளிட்டவை அதிமுக., ஆட்சியில் திட்டமிடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது திறப்பு விழா நடைபெறுகிறது.
ஆண்டாண்டு காலமாக பழைய பேருந்து நிலையத்தில் போஸ் மைதானம், அண்ணா பெயரில் அங்காடி, நேரு கலையரங்கம் என்று வணிக வளாகம் இருந்தது. தற்போது அந்தப் பெயரை மாற்றி கருணாநிதி பெயரை வைப்பது கண்டிக்கத்தக்கது. போஸ் மைதான பகுதியில் பூ மற்றும் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் வியாபாரம் செய்து வருகின்றனர் முதல்வர் வருகையை ஒட்டி அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த பூ மற்றும் காய்கறி வியாபாரிகளை அதிகாரிகளை வைத்து மாற்று இடம் வழங்காமல் அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றார்.
இதனிடையே மத்திய அரசின் உதவியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கு கருணாநிதியின் பெயர் வைப்பது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.