
அருப்புக்கோட்டையில் தலையாரி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 9,50,000 பணம் வாங்கி மோசடி. மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை கலைஞர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குருசாமி என்பவர் மகன் ராஜ். இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே மணி டிரான்ஸ்பர் நிறுவனம் நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் தலையாரி வேலைக்கு தயாராகி வந்துள்ளார். இவர் வேலைக்கு தயாராகி வந்ததை அறிந்த அவருடன் பழகி வந்த சுந்தரகோபி என்பவர் தனக்கு தெரிந்த நரிக்குடியை சேர்ந்த அரசியல்வாதி விஜயலட்சுமி என்பவர் உள்ளதாகவும் அவரிடம் பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் எனவும் ராஜ் யிடம் கூறியுள்ளார். இதை நம்பிய ராஜ் தனக்கும் தன்னுடைய மனைவியின் சகோதரி கார்த்திகா என்பவருக்கும் வேலை வாங்குவதற்காக ரூ 9,50,000 பணத்தை விஜயலட்சுமி, சுந்தரகோபி மற்றும் சுந்தரகோபின் தந்தை முருகனிடம் வழங்கியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி தலையாரி வேலை வாங்கி தராததால் ராஜ் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப தராமல் மூன்று பேரும் ராஜ்-க்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நீதிமன்றம் உத்தரவுப்படி நகர் குற்றப்பிரிவு போலீசார் சுந்தரகோபி, விஜயலட்சுமி, முருகன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.