விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் மரணமடைந்தனர்.20 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மினி பஸ் பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். டிரைவர், கண்டக்டர் உட்பட பயணிகள் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றிய விபரம்
வத்திராயிருப்பிலிருந்து வ. புதுப்பட்டிக்கு அர்ச்சுனாபுரம் கிராமம் வழியாக மினி பஸ் இயங்கி வருகிறது. நேற்று மாலை 4.45 மணியளவில் வத்திராயிருப்பிலிருந்து புறப்பட்டு புதுப்பட்டி நோக்கி சென்றது. பஸ்ஸில் வத்திராயிருப்பு பள்ளிகளில் படிக்கும் வ.புதுப்பட்டி அர்ச்சுனாபுரம் கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் 30 பேர் உள்ளே இருந்தனர்.
பஸ் அர்ச்சுனாபுரத்தை கடந்து கிறிஸ்டியான் பேட்டை என்ற ஊரை நோக்கி சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த போதர்குளம் கண்மாய் வளைவில் திரும்பிய போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின்கம்பம் மீது மோதி மிகவும் பள்ளமாக இருந்த தோப்பிற்குள் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த வ.புதுப்பட்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்கள் பாண்டி, நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். டிரைவர் கண்டக்டர் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த விவசாயிகள் மற்றும் கிறிஸ்டியன் பேட்டை பொதுமக்கள் ஓடி வந்து கவிழ்ந்து கிடந்த பஸ் கண்ணாடியை உடைத்து பயணிகளை வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காயமடைந்த பயணிகளை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கும் படுகாயம் அடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த மாணவர்களின் உடல்களை பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அம் மாணவர்களின் உறவினர்கள் பஸ் உரிமையாளரை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரி முன்பாக கூமாபட்டி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். காயமடைந்தவர்களில் சிபின் லூர்துராஜ் என்ற மாணவர் மிகவும் படுகாயமுற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் சுமித்ரா தேவி பாண்டீஸ்வரி ராஜ்குமார் லாவண்யா முத்துக்குமார் ராஜேஷ், மீராதேவி உட்பட 16 மாணவர்களும் மற்ற பயணிகளும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில் இந்த வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ்ஸில் புதிதாக வாகனம் ஓட்டும் பயிற்சி டிரைவர்களை மட்டுமே நியமிக்கின்றனர் அதன் உரிமையாளர்கள். ஏற்கனவே இந்த ரோடு மிகவும் குறுகலாக ஆபத்தானதாக உள்ளது. ஒரு பஸ் வந்தால் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட வழி இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் பயிற்சி டிரைவர்கள் அடிக்கடி இந்த வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் இது தெரிந்தும் யாரும் கண்டு கொள்வதில்லை இதனால் தான் இந்த கோர விபத்து நடந்தது என்றனர்.
பஸ் மின்கம்பத்தில் மோதியபோது இயற்கையாக அங்கு மின் தடை ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அந்நேரம் மின் சப்ளை இருந்திருந்தால் பஸ் மீது விழுந்த உயர் அழுத்த மின் கம்பிகளால் மின்சாரம் தாக்கி மொத்த பயணிகளும் உயிர் தப்பி இருக்க முடியாது என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசார் தெரிவித்தனர்.