
விடியல் ஆட்சியில் ஆடியில் மனுக் கொடுத்தால் ஐப்பசியில் மிளகாய் செடி வழங்கும் தோட்டக்கலைத்துறை : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
மிளகாய் செடி வழங்கிடக் கோரி ஆடி மாதம் மனுக் கொடுத்தால் ஐப்பசி 15ஆம் தேதி செடிகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வழங்குகின்றனர். இதனால் பயிர்கள் பருவம் தவறி வளராமல் முற்றிலும் சேதமடைந்து விட்டது என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண் அதிகாரி நாச்சியராம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு :
மதுரை மாவட்டத்தில் உள்ள கிருதுமால் நதியிலிருந்து 46 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவது வழக்கம். தற்போது நீர்வரத்து பாதையில் தூர்வார வேண்டும் என விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்தார்.
பின்பு, பேசிய ஆட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் பிற அரசுத்துறை மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமும் தூர் வாரலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடந்த காலங்களில் விவசாயிகள், மிளகாய் நாற்று கேட்டால், 45 நாட்கள் வளர்த்த செடிகளை வழங்குவார்கள். இதனால், விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. ஆனால், தற்போது, கேட்டதை விட குறைவாகவும், 20 நாள் மட்டுமே வளர்ந்து செடிகளை வழங்குகின்றனர். அவை வளர்வதே இல்லை. இதனால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை இந்த ஆண்டு சந்தித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மிளகாய் விளைச்சளை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், தோட்டக் கலைத்துறையில் உள்ள புதிய அலுவலர்கள், ஏனோ, தானோ என வேலை செய்கின்றனர். தரமற்ற செடிகளை வழங்குகின்றனர்.
விதையாக வழங்கினால் கூட விவசாயிகள் வளர்த்துக் கொள்வார்கள். ஆனால், தற்போது பருவம் தவறி விட்டது. இனி செடிகள் வழங்கியும் பலனில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, பேசிய விவசாயி ஒருவர், மிளகாய்ச் செடி வேண்டுமென ஆடி மாதம் மனு வழங்கினேன். ஆனால், ஐப்பசி 15ம் தேதி செடிகளை வழங்கினர். அதை நிலத்தல் ஊன்றும் போதே உடைந்து விட்டது. ஒரு செடிகூட வளரவில்லை. இதனால், எனக்கு பெரிய நஷ்டம் என்றார்.
பின்பு, பேசிய ஆட்சியர், இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கான கூட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் 95 மெ.டன் மட்டுமே நடந்துள்ளது. எனவே, கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென விஜயமுருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார்.
மானாவாரிப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை சரிவர நிறுவனங்கள் வழங்குவதில்லை. செயற்கைகோள் மூலம் பயிர்களை ஆய்வு செய்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால், நன்கு பயிர்கள் வளர்ந்து இடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சேதமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார்.
அப்போது பேசிய ஆட்சியர், இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் நடத்தி கோரிக்கை சரி செய்யப்படும் என்றார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரி அனைத்து விவசாயிகளும் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.