
அ.தி.மு.க., வின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறிய உயர்நீதிமன்றம். இரட்டை இலைக்காக தேர்தல் கமிஷனை அணுக வேண்டும் என பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயர், லெட்டர் பேடு ஆகியவற்றை பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு, இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக.,வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு இன்று(மார்ச் 25) நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க.,வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனக் கூறி, வரும் ஜூன் 10ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.