முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ‘பொட்டு’ சுரேஷ். இவர் கடந்த 2013–ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தி.மு.க. பிரமுகர் ‘அட்டாக்’ பாண்டியின் கூட்டாளிகள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ‘அட்டாக்’ பாண்டி தலைமறைவானார். பல்வேறு இடங்களில் பதுங்கிய ‘அட்டாக்’ பாண்டி 2½ ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 21–ந்தேதி மும்பையில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்து விமானம் மூலம் ‘அட்டாக்’ பாண்டியை மதுரைக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
‘பொட்டு’ சுரேஷ் கொலையில் உள்ள பின்னணியை விசாரிக்க ‘அட்டாக்’ பாண்டியை போலீஸ் காவலில் அனுமதிக்கக்கோரி தனிப்படையினர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பால்பாண்டி முன்னிலையில் ‘அட்டாக்’ பாண்டியும் ஆஜர்படுத்தப்பட்டார்.
வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு இரவு 7 மணி அளவில் ‘அட்டாக்’ பாண்டியை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் ‘அட்டாக்’ பாண்டியை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
‘பொட்டு’ சுரேஷ் கொலை தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா, விசாரணை அதிகாரி கோட்டைசாமி மற்றும் சிறப்பு புலனாய்வு போலீசார் ‘அட்டாக்’ பாண்டியை மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2006 முதல் 2012 வரை ‘அட்டாக்’ பாண்டிக்கும், ‘பொட்டு’ சுரேசுக்கும் இருந்த முன்விரோதங்கள் மற்றும் அரசியல் பின்னணிகள் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனிப்பட்ட முறையில் ‘பொட்டு’ சுரேஷ் தொடர்பான முன்விரோதம் குறித்து ‘அட்டாக்’ பாண்டி பதில் அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசியல் பின்னணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடர்பான கேள்விகளுக்கு மழுப்பலான வாக்குமூலத்தையே ‘அட்டாக்’ பாண்டி கூறி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
விடிய, விடிய நடந்த விசாரணையில் 100–க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு ‘அட்டாக்’ பாண்டியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை விசாரணை நடைபெறுகிறது. 4 நாட்களில் ‘பொட்டு’ சுரேஷ் கொலையில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்ப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ‘பொட்டு’ சுரேஷ் கொலையில் கைதான ‘அட்டாக்’ பாண்டியின் கூட்டாளிகள் சபாரத்தினம், சந்தானம், விஜயபாண்டி உள்ளிட்ட 17 பேர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். ‘அட்டாக்’ பாண்டி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சந்திக்க கூட்டாளிகள் திட்ட மிட்டுள்ளனர்.
இதனால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் 17 பேரையும் மீண்டும் கைது செய்ய தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்களது இருப்பிடங்கள் குறித்து ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.