நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
உயர் அதிகாரி கொடுத்த தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி கூறி இருந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் சென்று புதுச்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விஷ்ணுப்பிரியா தன்னுடன் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது உயர் அதிகாரி லைனில் வருவதாகவும், பிறகு தன்னுடன் பேசுவதாகவும் விஷ்ணுப்பிரியா கூறியதாக மகேஸ்வரி கூறி இருந்தார்.
இது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மகேஸ்வரி– விஷ்ணுப்பிரியா உரையாடல் தொடர்பான ஆடியோ விவரங்களை சி.பி. சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் விஷ்ணுபிரியாவின் செல்போன், அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர், டேப் ஆகியவை தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இன்று கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள விஷ்ணு பிரியா வீட்டிற்கு சென்று அவரது தந்தை ரவியிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாக ஜோதி, டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலைக்கு உயர் அதிகாரி மிரட்டல் தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.இதற்கான ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து உள்ளனர். இதனால் அந்த அதிகாரி விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.