சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை சீர்படுத்த ஆளும் அரசை பலப்படுத்த வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவியே தீர வேண்டியுள்ளது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து கூறியுள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்துள்ளது
கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதிபரின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவில் இருந்து போர்க்கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சிரியாவுக்கு போர் ஆலோசகர்களையும், ஆயுதங்களையும், வீரர்களையும் அனுப்பி வைத்திருக்கும் ரஷ்யாவின் நடவடிக்கையானது அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக பாடுபட்டுவரும் உலக நாடுகளின் முயற்சிகளை சீர்குலைப்பதாக அமைந்துவிடும்.
இந்த நேரத்தில் அவர்கள் எடுக்கும் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே தோல்வியை சந்தித்துவரும் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை காப்பாற்றி விட முடியாது. ரஷ்யாவின் தற்போதைய நடவடிக்கையானது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது என ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் பேட்டியளித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தீவிரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில்தான் சிரியா அரசுக்கு ஆயுதங்களை அளித்து, ஆதரித்து வருவதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள புதின், ‘அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்க வேண்டுமா?, எப்போது இறக்க வேண்டும்? என்பதை சிரியா நாட்டின் மக்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.
அதைவிடுத்து, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியை அழிக்க எடுக்கப்படும் எந்த முயற்சியாக இருந்தாலும், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டது போன்ற மோசமான சூழ்நிலையை உண்டாக்கி விடும் என நான் நம்புகிறேன். அங்கு அரசின் அனைத்து துறைகளும் சீர்குலைந்துப்போய் உள்ளன. ஈராக்கிலும் இதேநிலை தான் நீடிக்கின்றது.
சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை சீர்படுத்த ஆளும் அரசை பலப்படுத்த வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவியே தீர வேண்டியுள்ளது. அதேவேளையில், எதிர்ப்பாளர்களுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தி, சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.’ என்று கூறினார்.
சிரியாவில் ரஷ்யப் படைகளின் தலையீடு அதிகமாக உள்ளதே,,? இது அதிபர் பஷர் அல் ஆசாத்தை மீட்பதற்காகவா? என்ற கேள்விக்கு பதிலளித்த புதின், ‘உங்கள் யூகம் சரிதான்’ என்று தெரிவித்தார்.
சொந்தநாட்டு மக்களை மிககொடூரமாக நடத்திய அதிபர் ஆசாத்தின் அணுகுமுறைதான், சிரியாவில் உள்நாட்டுப் போரையும், ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ற இயக்கத்தையும் உருவாக்கி விட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையில் புதின் தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து தெரிவித்துள்ளார்.