நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 18–ந் தேதி அவருடைய அலுவலகத்துடன் கூடிய அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் வழக்கினை விசாரணை நடத்தி வந்த அதிகாரி என்பதாலும், இவர் பணியில் சேர்ந்த 7 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதாலும். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் 15 பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவியது. பின்னர் 9 பக்கங்களை மட்டுமே போலீசார் வெளியிட்டனர்.அந்த கடிதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை.
அதனால் கடிதத்தின் சில பக்கங்களை போலீசார் மறைத்து விட்டதாகவும் அதில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை தெரிவித்திருக்காலம் எனவும் அவரது தந்தை ரவி தெரிவித்தார்.
மேலும் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து விஷ்ணுபிரியா எழுதியது தான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.பின்னர் உயர் அதிகாரிகளின் தொடர் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அவர் குற்றம் சாட்டடினார்.
இதேபோல், விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்தி வந்த விஷ்ணுபிரியாவை உயர் அதிகாரிகள் டார்ச்சர் செய்ததாகவும் வழக்கில் தொடர்பில்லாத சிலர் வழக்கு போடச் சொல்லி வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.
விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி தலைமையில் ஏ.டி.எஸ்.பி. ஸ்டாலின், டி.எஸ்.பி வேலன், ராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டனர்.
இதற்கிடையில் விஷ்ணு பிரியாவுடன் பணியாற்றிய போலீசாரிடமும், அவருடைய பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் விஷ்ணுபிரியா தங்கியிருந்த அறையை முழுவதும் சோதனையிட்டனர்.இந்தநிலையில் அவர் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்–டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
இதில் விஷ்ணுபிரியாவின் செல்போன் எண்ணுக்கு கடந்த 10 நாட்களாக வந்த அழைப்புகள், அவர் தொடர்புக்குகொண்டு பேசிய அழைப்புகளை போலீசார் எடுத்துள்ளனர்.
இதில் அடிக்கடி பேசிய எண்கள் மற்றும் அதிக நேரம் பேசிய எண்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்ததில் 600 வினாடிகள் முதல் 1000 வினாடிகள் வரை பேசி இருப்பதாகவும், இதில் சில அழைப்புகள் இரவு நேரங்களில் வந்ததாகவும், அவை சுமார் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் பேசியதாக தெரியவந்தது. செல்போனில் அதிக நேரம் பேசிய எண் சென்னையில் இருந்து பேசப்பட்டது தெரியவந்தது.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி.யாக பணியாற்றிய விஷ்ணுபிரியாவுக்கு திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் குருக்கள் ஒருவரின் மகன் அறிமுகம் ஆனதும், விஷ்ணுபிரியா தற்கொலை செய்துக்கொள்வதற்கும் 5 நாட்களுக்கு முன்பு தினமும் அவரிடம் செல்போனில் பேசியது தெரியவந்துள்ளது.சென்னையில் இருந்து பேசிய நபர் யார்? அவர் என்ன பேசினார்? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
விஷ்ணுபிரியா தற்கொலை செய்துக் கொண்ட அன்றும் அந்த நபர் 15–க்கும் மேற்பட்ட முறை விஷ்ணுபிரியா செல்போனுக்கு தொடர்புக்கு கொண்டு பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்துள்ள போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வாலிபருக்கும் விஷ்ணு பிரியாவுக்கும் இடையே உள்ள தொடர்பு காதலாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில் தற்கொலை செய்துக் கொள்வதற்கு 2 தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இருந்தபோது விஷ்ணுபிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளதும். அந்த மாப்பிள்ளை யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதில் அதிகாரிகளின் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு இறுதிகட்ட விசாரணை எட்டியுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்னும் ஓரிரு நாளில் தாக்கல் செய்ய உள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.