நமக்கு நாமே விடியல் எழுச்சி பயணத்தில் மதுரையில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், இன்று தேனி மாவட்டம் புறப்பட்டு சென்றார்.
தேனிக்கு புறப்படும் முன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் எனது எழுச்சி பயணத்தை தடை செய்வதற்காக மதுரைக்குள் நுழைய தடை விதித்தனர். நான் நடைபயிற்சி செய்வதாக இருந்த பூங்காவிற்கும் பூட்டு போடப்பட்டது. எனது பயணத்தை அவர்கள் தடை செய்திருந்தால், தடையை மீறி இந்த பயணத்தை நடத்த வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பல்வேறு தடைகளை மீறி இந்த பயணம் எழுச்சிகரமாக நடந்து கொண்டுள்ளது. தொடர்ந்து பயணம் நடைபெறும். எனது 2ம் கட்ட பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
தமிழக அரசு மட்டுமின்றி மதுரை மாநகராட்சியும் குடிநீர், ரேஷன் பொருட்கள், முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை முறையாக வழங்குவதில்லை .
மேலும் இலவச பொருட்கள் எங்களுக்கு வேண்டாம். இலவசங்களை அடகு வைத்து கணவன்மார்கள் மது குடித்து விடுவதால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், பெண்களும் குறைகூறி உள்ளனர்.
சட்டசபையில் நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவிலக்கை கொண்டு வரமுடியாது என பேசி உள்ளது வேதனை அளிக்கிறது.
மதுவிலக்கு கொண்டு வரப்படுமா, வராதா என்பது குறித்து சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும் என ஸ்டாலின் கூறினார் .