நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விஷ்ணுபிரியா 18-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் கடலூரில் உள்ள கோண்டூரில் விஷ்ணுபிரியாவின் பெற்றோர் வசித்து வரும் வீட்டுக்கு நேற்று மதியம் கனிமொழி எம்.பி. வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த, விஷ்ணுபிரியா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வந்திருந்தனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா மரணம் சி.பி.ஐ. விசாரணையாக இருக்க வேண்டும் என்று தலைவர் கருணாநிதி ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பல பெண் காவலர்கள் இப்படிப்பட்ட நிகழ்வை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். பெண் காவலர்கள் சந்திக்கிற பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்பு கூட தமிழக காவல்துறையில் இல்லை. தமிழகத்தில் பல அரசு அதிகாரிகள் இது போன்ற துயரமான முடிவை தேடிக்கொள்ளும் சூழல் தான் உள்ளது என கூறினார்.
முன்னதாக மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனத்தலைவர் டிராபிக் ராமசாமி, விஷ்ணுபிரியா வீட்டுக்கு வந்து அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுவது குறித்து சி.பி.ஐ. இயக்குனருக்கு கடிதம் எழுதுவேன். வழக்கும் தொடரப்போகிறேன். இனிமேல் காவல்துறை தன்னிச்சையாக செயல்படக்கூடிய நிலையை நீதிமன்றம் மூலம் உருவாக்கிக்காட்டுவேன் என்றார்.
தமிழக பாஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பிற்பகல் விஷ்ணுபிரியாவின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா விசாரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், சந்தேகத்துக்கு உரியவர்களும் உயிருடன் இருக்கும் போது, விசாரணை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதை பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டமும், வழக்கும் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளால் பெண் அதிகாரிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறினார்.