இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்க வரைவு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நிருபர்களிடம் நேற்று தெரிவித்ததாவது:-
எனது அரசு இலங்கை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். வெளிநாட்டு நீதிபதிகள், இங்கு செயல்படுவதை அரசியல் சாசனம் அனுமதிக்காது. எனவே, உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்ய முடியாது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் இலங்கை வெளியுறவுதுறை அமைச்சர் எடுத்துக் கூறுவார்.
அதேசமயத்தில், சர்வதேச நிபுணர்களின் உதவியை ஏற்றுக்கொள்வோம். அதற்கு கூட இலங்கை நீதித்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும். ராஜபக்சேவின் தவறால்தான், சர்வதேச விசாரணையை சந்திக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. ஆனால், நாங்கள் இப்பிரச்சினையை சரியாக கையாண்டு, போர்க்குற்ற விசாரணையை சந்திப்பதில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்றி உள்ளோம் என ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.