காங்கிரசுக்கும், கலைஞர்களுக்கும் இடையே நெருங்கி தொடர்பு உண்டு. மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும் காங்கிரஸ் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் காமராஜரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தான்.
வருகிற 1–ந் தேதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிவாஜியின் பிறந்தநாள் விழா காமராஜர் அரங்கில் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
2–ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு ஏன் வேண்டும் என்பது பற்றி துண்டு அறிக்கை விநியோகிக்கப்படும். வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவி சோனியா, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்பட தலைவர்கள் பற்றி இழிவாக விமர்சனம் செய்து வருகிறார்.
அவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. சோனியா, மன்மோகன்சிங் மீது எந்த நீதிமன்றங்களிலும் வழக்குகள் கிடையாது. தொடர்ந்து இதே போல் அவர் விமர்சனம் செய்தால் தமிழ்நாடு முழுவதும் மோடியின் கொடும்பாவி எரிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.
மதசார்பற்ற இந்தியாவை மதவெறி நாடாக மாற்ற அவர் முயல்கிறார். தமிழ்நாட்டில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்ற அமைச்சர் சொல்வது ஏற்கக்கூடியது அல்ல.
1967 வரை காங்கிரஸ் ஆட்சி மதுவிலக்கை அமுல்படுத்தி காட்டியது. எனவே எங்களால் அது முடியும்.முன்னதாக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவுக்கு இளங்கோவன் மலர்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்துவது வெறும் கண் துடைப்பு. இதில் நியாயம் கிடைக்காது. அடுத்து வருகிற ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாக இருக்கும். அல்லது காங்கிரஸ் ஆதரிக்கும் ஆட்சி அமையும். அப்போது மீண்டும் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இளங்கோவன் கூறினார்.