தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தலைமை தாங்கிய மதுரை வக்கீல் சங்கத்தின் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி மீது சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மதுரை வக்கீல்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரச்சினை செய்யலாம் என்று தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த முறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கப்படும் நீதிமன்ற அறைக்குள், வழக்கு தொடர்பானவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பொன்.கலையரசனுக்கு, நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் உத்தரவிட்டார்கள்.
இதையடுத்து, வழக்கு விசாரணை நடந்த நீதிமன்ற அறையை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கில் தொடர்பில்லாத வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கவில்லை.
ஆனால், உளவுப்பிரிவு போலீசாரை மட்டும் நீதிமன்ற அறைக்குள், பாதுகாப்பில் நின்ற போலீசார் அனுமதித்தார்கள். இதையடுத்து கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்காத வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில், வழக்கறிஞர்கள் அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
நீதிபதிகளின் உத்தரவின் படி, இந்த முறையும் வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்ற அறைக்குள், வழக்கில் தொடர்பு உள்ளவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்ற நிர்வாகம் கூறியுள்ளது. அதேநேரம், நீதிமன்ற அறைக்குள் என்ன நடக்கிறது? என்பதை வெளியில் இருந்து பார்க்க ராட்சஷ திரைகள் அமைத்து, நேரடி ஒளிப்பரப்பு செய்யவும் நீதிமன்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற1862ம் ஆண்டு கட்டப்பட்டது. இதுநாள் வரை, வழக்கு விசாரணையை ராட்சஷ திரை அமைத்து, நேரடி ஒளிபரப்பியது கிடையாது. ஐகோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக இன்று பிற்பகலில் வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மேலும், இந்த வழக்கு விசாரணையை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.