தென்பொதிகையில் உருவாக்கி பூங்குளத்தில் இருந்து புறப்பட்டு, அடர்ந்த காட்டுப் பகுதிகளையும், அந்த மலைப்பகுதிகளில் உருவாக்கி ஓடி வருகின்ற பல சிற்றாறுகளையும் இணைத்துக் கொண்டு பாணதீர்த்தம், கல்யானதீர்த்தம், அகத்தியர் அருவி, பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, ஊர்க்காடு, ரெங்கசமுத்திரம், வீரவநல்லூர், முக்கூடல், திருவிடைமருதூர், அத்தாழநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்சேவல், கோடகநல்லூர், சுத்தமல்லி, திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஆத்தூர், முறப்பநாடு, புன்னைக்காயல் என்று வழிநெடுக கற்பாறைகளையும், தடைகளையும் கடந்து இன்றுவரை வற்றாத ஜீவநதியாகப் பயணித்து அனைவருக்கும் பயன்தந்து கடலில் கலக்கிற புண்ணிய நதிதான் தாமிரபரணி. அந்தத் தண்ணீரைக் குடித்து வளர்த்தவர்கள் தாமிரபரணியைத் தாயாகப் போற்றி வழிபடுகிறார்கள். அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து விழா எடுக்கிறார்கள்.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யாள் அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் வழிகாட்டுதலின் படி “அகில பாரத துறவியர் சங்கம்” சுவாமி ராமானந்தர் தலைமையில் ஜீவநதியான தாமிரபரணி மகாபுஷ்கர விழா 11.10.2018 முதல் 22.10.2018 வரை மிக விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இது அனைவருக்கும் மகிழ்ச்சி தருகிற நல்ல செய்தி.
இந்த விழாவில் அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டு தங்களது நன்றியைத் தாமிரபரணித் தாயாருக்குத் தெரிவித்திருக்கிறார்கள். எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம். ஒரு சிறிய அசம்பாவிதமோ, மனவருத்தமோ நடக்கவில்லை. தங்களால் எந்தத் தீர்த்த கட்டத்திற்குச் செல்ல முடியுமோ அங்கு சென்று நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து உள்ளம் மகிழ்ந்து சென்றிருக்கிறார்கள்.
அன்னக்கொடி ஏற்றி, அத்தனை பக்தர்களுக்கும் அன்னதானம் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்ததை அனைவரும் பாராட்டுகின்றனர். வேத பாராயணம், தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஓதுதல், இதிகாசக் கதைச் சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மாலை ஆறரை மணிக்கு ஸ்ரீமாதா தாமிரபரணித் தாயாருக்கு மங்கள ஆரத்தி எடுத்து வழிபடும் அற்புத நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருத்தது. இதை நேரில் காண முடியாத பக்தர்களுக்காக முகநூல், வலைத்தளம் மூலம் நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அனைத்து ஊர்களிலும் இந்த மகாபுஷ்கர விழாவைச் சிறப்பாக நடக்க உதவிய தர்மவான்கள், வேத பண்டிதர்கள், மடாதிபதிகள், ஆதீனகர்த்தாக்கள், தன்னார்வத் தொண்டர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் அனைவரும் போற்றத்தக்கவர்கள், நன்றிக்குரியவர்கள். பன்னிரண்டு தினங்களாக பலலட்சம் மக்கள் வந்து நீராடிச் சென்றாலும் நதியை மாசுபடுத்தவில்லை என்பதை நேரில் கண்டவர்கள் மிகவும் பரவசப்பட்டுச் சொல்கிறார்கள். “அகில பாரத துறவியர் சங்கத்தின்” அத்தனை உறுப்பினர்களுக்கும், முக்கியமாக சுவாமி ராமானந்தருக்கும் மக்கள் மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவிக்கிறார்கள்.
“சென்னையிலும் தாமிரபரணி மகாபுஷ்கர நிகழ்ச்சி”
தாமிரபரணி மகாபுஷ்கரம் தொடர்பாகச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப் பட்டு நூல்களும் வெளியிடப்பட்டிருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைத் தவிர சென்னையிலும் கல்யாண்நகர் சோசியேஷேன், தேஜஸ் அறக்கட்டளை சார்பாக விழா நடைபெற்றது. திரு. T.S. கிருஷ்ணமூர்த்தி,(முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்) தலைமை வகித்தார். திரு. நல்லி குப்புசாமிச் செட்டியார், திரு.ஸ்ரீநிவாசன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், அம்மன் தரிசனம் ஆசிரியர் J.S. பத்மநாபன் ஆகியோர் தாமிரபரணியின் பெருமைகளைப் பேசினார்கள். நிகழ்ச்சியில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 34வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள் எழுதிய “தாமிரபரணி அஷ்டகம்” என்ற சிறு நூலும் வெளியிடப்பட்டது. இந்தத் தாமிரபரணி அஷ்டகத்தை ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள் 1927ம் வருடம் பாபநாசத்தில் சாதுர்மாசிய விரதம் கடைப்பிடித்த காலத்தில் எழுதி அருளியதாக அவரது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.
நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார் சந்திரமோகன். கலந்து கொண்டவர்களுக்கு தாமிரபரணி மகாபுஷ்கர தீர்த்தமும், அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது.
– மீ.விசுவநாதன்