மதுரை அருகே, வளர்ப்பு நாய் ஒன்று தன் உயிரை கொடுத்து, மர்ம கும்பலிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரில் வசிப்பவர் முத்துக்குமார்.
இவர், அப்பகுதியில் உள்ள செந்தில் என்பவருக்கு சொந்தமான அப்பளக் கடையில் வேலைபார்த்து வருகிறார்.
முத்துக்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பல், முத்துக்குமாரை தேடி பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அப்பளக் கடைக்கு சென்றனர்.
இவர்களை பார்த்த்தும் முத்துக்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதனை பார்த்த செந்தில்- தமிழ்செல்வி தம்பதியினர் மர்ம கும்பலை தட்டிக்கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல், கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கினர்.
அவர்களிமிருந்து தப்பிக்க தம்பதி இருவரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த கும்பலில் உள்ள ஒருவன் தமிழ்செல்வியின் இடது கையில் அரிவாளால் வெட்டியதில், அவரது கை விரல்கள் துண்டானது.
இந்நிலையில் எஜமானவர்களை தாக்குவதை பார்த்து கோபமடைந்த அவர்களது வளர்ப்புநாய், ஆவேசத்துடன் குரைத்தபடி அந்த கும்பல் மீது பாய்ந்தது. ஆனால் அந்த கும்பல் நாய் என்று கூட பார்க்காமல் அளிவாளால் வெட்டியுள்ளனா். இதில், வயிற்றில் வெட்டு விழுந்து குடல் சரிந்த நாய், துடிதுடித்து இறந்தது.
இதனிடையே சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வர, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
செந்தில், அவரது மனைவி தமிழ்செல்வி ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த விஜய் (22), ஹரி (19), பிரவீன் பாலா (18), சிவா (19), சாகிர் உசேன் (19) மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
தலைமறைவான விக்னேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே காவல்துறையினர் பாதுகாப்பை அதிகப்படுத்தி இதுபோன்ற குற்றசம்பவங்கள் நேராமல் தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.