Homeஅடடே... அப்படியா?தேசிய மூவர்ணக் கொடியின் வரலாறும் ஏற்றும் விதிமுறைகளும்!

தேசிய மூவர்ணக் கொடியின் வரலாறும் ஏற்றும் விதிமுறைகளும்!

ru2 2 - Dhinasari Tamil
“தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதி திகழும் செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!” என்று போற்றி வீறு கொண்டு பாடினார் பாரதியார்.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 15 ஐ சுதந்திர தினமாக கொடியேற்றி, இனிப்பு வழங்கி விடுமுறை நாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால் இதனைப் பெற எத்தனை தேச பக்தர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார்கள் என்பதை இந்த ஒரு நாளிலாவது நினைத்துப் பார்ப்பது நம் கடமை.

இந்தியாவின் பாரம்பரியத்தையும், குடியரசையும் நம் தேசியக் கொடி பறைசாற்றுகிறது. தேசியக் கொடி ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர் மூச்சு. கொடிகாக்க உயிர் துறந்த குமரனை நாம் அறிவோம்.

ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக விளங்குவது அந்நாட்டின் தேசியக் கோடியே! ஒவ்வொரு நாடும் அது பிறக்கும் முன்பாகவே தேசியக் கொடியை உருவாக்கி இருக்கும். அது போலவே இந்தியாவும் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தேசியக் கொடியை உருவாக்கியது. பல வித உருவம், அளவு, நிறங்களோடு பல ஆண்டு காலமாக தயாரிக்கப்பட்டு மாறுதல் பெற்று வந்த நம் தேசியக் கொடி 1947 ல் தற்போதைய உருவத்தை பெற்றது. .

தற்போது நாம் ஏற்றி வணங்கும் தேசியக் கொடி உருவான வரலாறு சுவையான ஒன்று. இந்தியாவின் நீண்ட கால விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக தேசியக் கொடி திகழ்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, போராடும் இயக்கங்களை ஒருங்கிணைக்க ஒரு கொடியின் தேவையை தலைவர்கள் உணரத் தொடங்கினர்.
ru1 3 - Dhinasari Tamil


1904 இல் முதன்முதலாக சுவாமி விவேகானந்தரின் ஐரிஷ் சீடரான சகோதரி நிவேதிதையால் விடுதலைப் போராட்டத்தை இணைக்கும் தேசிய கொடி வடிவமைக்கப்பட்டது. இது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்டிருந்தது. மஞ்சள் நிறம் வெற்றியையும், சிவப்பு நிறம் விடுதலைப் போரட்டத்தையும் குறிப்பதாக அமைந்தது. அதன் மேல் வங்க மொழியில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டு, இந்திரனின் வஜ்ராயுதமும், வெள்ளை தாமரையும் வரையப்பட்டிருந்தன. வஜ்ராயுதம் வலிமையையும், தாமரை புனிதத்தையும் குறித்தன. இக்கொடி, ‘நிவேதிதையின் கொடி’ என்றழைக்கப்பட்டது.

பின், 1906 ல் நீலம், மஞ்சள், சிவப்பு என்று நிறபட்டைகளைக் கொண்ட சுதந்திரக் கொடி வடிவமைக்கப்பட்டது. நீல நிறப் பட்டையில் எட்டு நட்சத்திரங்களும் சிவப்பு பட்டையில் சூரியனும், நட்சத்திரமும், மஞ்சள் பட்டையில் தேவநாகரி எழுத்தில் வந்தே மாதரமும் பொறிக்கப்பட்டிருந்தன.

1907, ஆகஸ்ட் 22 ல் மேடம் புகாஜி காமா, வீர் சவார்கர் மற்றும் ஷ்யாம் கிருஷ்ண வர்மா மூவரும் சேர்ந்து ஒரு புதிய கொடியை வடிவமைத்தனர். இக்கொடி, ‘மேடம் காமா கொடி’ என்றழைக்கப்பட்டது. இது 1907 ல் ஜெர்மனியில் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் இந்திய சோஷலிசக் கூட்டத்தில் முதன் முதலாக மேடம் காமாவால் ஏற்றப் பட்டது. ஒரு புடவை கட்டிய பெண்மணி வெற்றியுடனும் பெருமையுடனும் இந்திய சுதந்திரப் போராட்டச் சின்னமான தேசிய கொடியை அங்கு பறக்க விட்டார். அதனால் இது, ‘பெர்லின் கமிட்டிக் கொடி’ என்றும் பெயர் பெற்றது. அது மேலே பச்சை வண்ணம், நடுவில் மஞ்சள், அடுத்து சிவப்பு வண்ணங்களைக் கொண்டிருந்தது. எட்டு தாமரைகள், வந்தே மாதரம், இந்து, முஸ்லீம் நம்பிக்கைகள் இணைந்த நாடான பாரத்தை குறிக்கும் சூரியனும் சந்திரனும் அக்கொடியில் இடம் பெற்றிருந்தன.

1916 ல் ஹோம் ரூல் இயக்கம் நடைபெற்ற போது, லோக மான்ய திலக், அன்னி பெசன்ட் அம்மையார் இருவரும் சேர்ந்து ஒரு கொடியை உருவாக்கினர். அது கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் அன்னி பெசன்டால் ஏற்றப்பட்டது.

1917 ல் திலக் மீண்டும் ஒரு புது கொடியை வடிவமைத்து, அதில் சப்த ரிஷிகளைக் குறிக்கும் ஏழு நட்சத்திரங்களை அமைத்தார். நான்கு நீல நிறப் பட்டைகள், ஐந்து சிவப்பு நிறப் பட்டைகள், இவற்றோடு, இடது மூலையில் இங்கிலாந்தின் யூனியன் ஜாக்கும், வலது புறம் வெள்ளை நிற பிறை சந்திரனும், நட்சத்திரமும் கொண்டிருந்த அக்கொடி, மக்களின் மத சார்பான அபிமானத்தைப் பெறவில்லை.

1921 ல் சிவப்பு மற்றும் பச்சை என்ற இந்து, முஸ்லீம் இனத்தைக் குறிக்கும் கொடி உருவாக்கப்பட்டபோது, அதில் வெள்ளை நிறத்தை இணைத்து மகாத்மா காந்தி வெள்ளை, பச்சை, சிவப்பு நிறங்களைக் கொண்ட கொடியை உருவாக்கினார். மேலே உள்ள வெள்ளை பட்டை சத்தியத்தையும், பச்சை நிறம் விவசாயத்தையும், சிவப்பு நிறம் விடுதலைப் போராட்ட முனைப்பையும் குறித்தது. அயர்லாந்து நாட்டுக் கொடியை போன்ற அமைப்பு கொண்டிருந்தது அக்கொடி.

1931 ல் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த பிங்களி வெங்கையா என்பவர் ஒரு புதிய கொடியை உருவாக்கினார். காவி, வெள்ளை , பச்சை, நிறங்களுடன் மத்தியில் ராட்டினத்துடன் அக்கொடி உருவாக்கப்பட்டது. மேல் பட்டையில் உள்ள காவி நிறம் வலிமையையும், நடுவில் உள்ள வெள்ளை சத்தியத்தையும், அடியில் உள்ள பச்சை பசுமையையும் குறித்த இக்கொடியை 1947 ல் இந்திய விடுதலை போராட்டக் குழுவினர் தேசிய கொடியாக ஒரு மனதாக ஏற்றனர். மத்தியில் இருந்த ராட்டினத்திற்கு பதில் அசோக சக்கரம் கடல் நீல நிறத்தில் வரையப்பட்டது. இது வாழ்க்கை சுழற்சியைக் குறிக்கிறது. இதுவே பின் சுதந்திர பாரதத்தின் கொடியாயிற்று. பிங்களி வெங்கையாவால் உருவாக்கப்பட்ட இக்கொடி இந்தியாவின் நீண்ட கால சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் சின்னமாக விளங்குகிறது.

22-7-1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபை கூடிய போது, இக்கொடி இந்திய தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது. முதன் முதலாக 1947 ல் டெல்லி செங்கோட்டையில் அதிகாரப் பூர்வமாக ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்டது.

தேசியக் கொடியின் அளவு முறை:-

இந்தியக் குடியரசு 1951 ல் தேசியக் கொடிக்கு அளவு முறைகளை நிர்ணயித்தது. பின் 1964ல் சர்வ தேச அளவு முறைகேற்ப இந்திய தரக் கட்டுப்பாட்டுத் துறை இதனை மெட்ரிக் அளவு முறையாக மாற்றியது. பின், ஆகஸ்ட் 17, 1968 ல் மீண்டும் இந்த அளவு முறை மேம்படுத்தப்பட்டது.

இதன்படி, கொடியின் நீளம், அகலம், நிறங்களின் அடர்த்தி, பளபளப்பு, துணியின் தரம் , கொடிக் கயிற்றின் தரம் இவை நிர்ணயிக்கப்பட்டு, அதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

இந்திய தேசியக் கொடி, கைத்தறித் துணியில் மட்டுமே இருக்க வேண்டும். பருத்தி, பட்டு மற்றும் உல்லன் இவற்றுள் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறி துணியால் கொடி செய்யப்பட வேண்டும். இதிலும், கொடியின் முக்கிய மூவர்ணப் பகுதி காதி-பண்டிங் என்ற நெசவாலும், கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி – டக் என்ற நெசவாலும் இருவகையாக உருவாகப்பட வேண்டும் என்ற விதி முறை உள்ளது.

கொடி ஏற்றும் விதி முறைகள்:-

2002 க்கு முன் வரை தேசியக் கொடியை இஷ்டப்பட்ட இடத்தில் யார் வேண்டுமானாலும் ஏற்ற முடியாதபடி தடை இருந்தது. ஆனால், 2002, ஜனவரி 26 முதல் பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் ஏற்றி மகிழலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை அடுத்து வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், பொது இடங்கள் அனைத்து விழாக்களிலும் மக்கள் கொடியேற்றி மகிழ்கின்றனர்.

தேசியக் கொடியை ஏற்றுவதிலும் சில விதி முறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. தேசியக் கொடிக்கு எவ்விதத்திலும் அவதூறு, அவமரியாதை விளையாமல் கையாள வேண்டும். மத நோக்கத்திற்கான நிகழ்சிகளில் தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது. உடைகளில் அச்சிடக் கூடாது. சூரிய உதயத்தின் போது கொடியேற்றி, சூரியன் மறையும்போது இறக்கி விட வேண்டும்.

கிழிந்த, நிறம் மங்கிய, கசங்கிய நிலையில் உள்ள கொடி ஏற்றப்படக் கூடாது. தரையை தொட்டபடியோ, தண்ணீரில் மிதக்கும்படியோ பறக்கவிடக் கூடாது. தேசிய கொடி பறக்கும் போது அதற்கு மேல் உயரமாக வேறு எந்த கொடி அல்லது துணி பறக்காமல் கவனமாக இருக்க வேண்டும். கொடியின் மேலே பூமாலை உள்ளிட்ட வேறு எந்த பொருளும் இடம் பெறக் கூடாது.

இந்திய மக்களின் தேச பக்திக்கும், விடுதலைக்கும் கம்பீரமான சின்னமே நம் தேசியக் கொடி! நம் பாரம்பரியத்தின் அடையாளமாக பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி சுதந்திர பாரதத்தை கௌரவிப்போம்!

-ராஜி ரகுநாதன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,814FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...