இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த 1.5 கிலோ தலைமுடியை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ள சம்பவமானது பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண் ஒருவர் சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
பெண்ணின் பெற்றோர் உடனடியாக அவரை அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் மன அழுத்தத்தில் சற்று பாதிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
மன அழுத்தத்தினால் அந்த பெண் மண், கரி ஆகியவற்றை விரும்பி உண்டு வந்துள்ளார். ஒருபடி மேலாக சென்று தன்னுடைய கூந்தல் முடியையே அவர் சாப்பிட்டுள்ளார். இதனால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மிகவும் சிரமப்பட்டனர்.
பின்னர் அவருடைய வயிற்றை பரிசோதித்து பார்த்தபோது 1.5 கிலோ முடி உருண்டை இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பெற்றோரிடம் கூறி உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இளம் பெண் மனரீதியாக பலவீனமாக இருந்ததால் மருத்துவர்கள் மிகவும் நுட்பமான முறையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.