தென்காசி புதிய மாவட்டமாக அறிவிப்பு : மத்திய அரசு ஒப்புதல்! – என்று ஒரு செய்தி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் இன்று பெரிதும் பரவலாயின. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பலருக்கும் இந்த செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது.
அந்தச் செய்தியில்… தென்காசியை புதிய மாவட்டமாக மாநில அரசு அறிவித்ததற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தாெடந்து புதிய மாவட்டம் தொடங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடம் தேர்வு செய்யும் பணி, மாவட்டஆட்சியர் மற்றும் ஆணையர் அறிவிப்பு,ஆகியவை நடைபெற்றது.
இந்நிலையில் தென்காசியை புதிய மாவட்டமாக தமிழகஅரசு அறிவித்ததற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் தென்காசியில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம் என 6 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் முதல் மாவட்ட ஆட்சியராக அருண்சுந்தர் தயாளன் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- என்று குறிப்பிடப் பட்டு, கூடவே ஒரு படமும் பகிரப் பட்டுள்ளது. அது, விக்கிபீடியா பக்கத்தில் தென்காசி மாவட்டம் என்று உருவாக்கப் பட்டு, எவரோ எடிட் செய்து, சேர்க்கப்பட்ட தகவல்கள்!
இதை உண்மை என்று நம்பி பலரும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்தார்கள். குறிப்பாக, அந்தப் படத்தில், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் நீக்கப் பட்டு, அதில் ஆலங்குளம் இடம் பெற்றிருந்தது. .ஏற்கெனவே சங்கரன்கோவில் பகுதியினர் தங்களை தென்காசியில் சேர்க்காமல், தொடர்ந்து திருநெல்வேலியில் வைத்திருக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.
அதே நேரம், இந்தப் புதிய வரையறையில், சங்கரன்கோவில் கடந்து, சிவகிரி தாலுகா தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்றது. அதுவும் பெரும் விவாதத்திற்குள்ளானது.
குறிப்பாக, தென்காசி புதிய மாவட்டம் குறித்து மத்திய அரசு அனுமதி என்று கூறி, ஒரு இமேஜ் வாட்ஸ் அப்பில் வைரலாக்கப் படுகிறது. அது விக்கிபீடியா இமேஜ். அதை நேற்று யாரோ திருத்தியிருக்கிறார்கள். அதில், சங்கரன்கோவில் இல்லை. பதிலாக ஆலங்குளம் இடம்பெற்றிருக்கிறது. இந்தத் திருத்தங்களை யார் வேண்டுமானாலும் விக்கிபீடியாவில் மேற்கொள்ளலாம். எனவே இது அதிகாரபூர்வமானதல்ல!
ஒரு மாநிலத்தின் புதிய மாவட்டங்கள் தொடர்பில் மத்திய அரசு அனுமதி (அப்ரூவல்) ஒப்புதல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சொல்லப் போனால், மத்திய அரசுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை.
மாவட்டம் உருவாக்குதல், முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகாரத்துக்கு, நிர்வாக வசதிக்கு உட்பட்டது. எனவே மத்திய அரசு ஒப்புதல் என்ற வாசகம் தவறானது.
சட்டமன்றத்தில் கூட்டத்தொடரில் அறிவிக்கப் படும் தீர்மானம், நிர்வாகத்துக்கு உட்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப் படும். அவர், அதில் கையெழுத்திட்டு அனுப்புவார். மற்றபடி, ஐ.ஏ.எஸ்., நியமனம் தொடர்பில், மாநில அரசே நிர்வாக வசதிக்கு உட்பட்டு, மேற்கொள்ளலாம். கூடுதல் ஐ.ஏ.எஸ்.,கள் தேவைப்படும் போது, மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைக்கலாம்! அது எண்ணிக்கையின் பாற்பட்டது.
நிலைமை இவ்வாறிருக்க, இதனை எவர் கிளப்பியது என்று பலரும் பதில் கேட்டவண்ணம் இருந்தனர். மேலும், மாவட்ட வரையறைக்காக தமிழக அரசு நியமித்த அதிகாரியை, மாவட்ட ஆட்சியர் என்று கூறி பதிவு செய்து விக்கிபீடியாவில் குறிப்பிடப் பட்டிருப்பதும், அதன் நம்பகத்தன்மை குறித்து வெளிப்படையாகத் தெரிவித்தது .