- Ads -
Home அடடே... அப்படியா? விக்கிரவாண்டி மக்கள் புகட்டிய பாடம்; ஸ்டாலின் கற்க மறுக்கும் படிப்பினை!

விக்கிரவாண்டி மக்கள் புகட்டிய பாடம்; ஸ்டாலின் கற்க மறுக்கும் படிப்பினை!

தோல்விகள் கொடுக்கும் படிப்பினைகளும், அனுபவங்களும் மகத்தானவை. அவை தான் அகங்காரம் கொண்டு தவறான பாதையில் செல்லும் மனிதர்களுக்கு, எதார்த்தத்தை புரிய வைத்து சரியான திசையில் பயணிக்க வழிகாட்டும். ஆனால், விக்கிரவாண்டி தேர்தல் படுதோல்வி குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ள கருத்துகள், அவர் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,  சில கட்சிகள் திட்டமிட்டு கிளப்பிய சாதி உணர்வு தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என்றும், அதையும் தாண்டி திமுக அணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்களித்திருப்பதாக கூறியுள்ளார். புளுகு மூட்டைகளின் மொத்த வணிகரிடமிருந்து வெளியாகியுள்ள புதிய பொய், புதிய பழி என்பதைத் தவிர, இதில் வேறு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் சூழலையும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தையும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் அனைவருக்கும், சாதி உணர்வை திட்டமிட்டு  கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? என்பது மிகவும் நன்றாகத் தெரியும்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு, சுமார் 42,000 வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சி வென்றது. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், கூட்டணி தர்மத்தை மதித்து, அதிமுகவுக்கு ஆதரவு அளித்த பா.ம.க. அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டது. அதிமுக மற்றும் பா.ம.க.வின் கடந்த கால சாதனைகளை விளக்கியும், இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அத்தொகுதிக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பது தான் பா.ம.க. பரப்புரையின் அடிப்படையாக இருந்தது.

ALSO READ:  தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

ஆனால், விக்கிரவண்டியில் திமுகவுக்கு எதிராக வெறுப்பு அலை வீசுவதையும், அதனால் இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதையும் உணர்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின், வழக்கம் போலவே புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு, கடந்த 7-ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்- ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு  மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தொடங்கிய அந்த அறிக்கையில், தகுதியின் அடிப்படையில்  பல்வேறு உயர்பதவிகளுக்கு வந்த வன்னியர்களின் பெயர்களை பட்டியலிட்டு, அவர்களுக்கெல்லாம்  திமுக தான் பதவி வழங்கியதாகக் கூறி அவர்களைக் கொச்சைப்படுத்தியிருந்தார்.

கலப்படமில்லாத பொய்களைக் கூறி வன்னிய மக்களை ஏமாற்ற முயன்றதுடன், வன்னிய சமுதாயமே தி.மு.க.விடம் மண்டியிட்டு யாசகம் பெற்றது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்த ஸ்டாலின் முயன்றதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், அவரது அரைவேக்காட்டு அறிக்கைக்கு ஆதாரத்துடன் பதில் அளித்தேன்.

தி.மு.க.வின் அரசியல் வளர்ச்சி என்பது வன்னிய மக்கள் போட்ட பிச்சை. 1957 தேர்தலில் தி.மு.க.  வெற்றி பெற்ற 15 தொகுதிகளில் 14 இடங்களும், 1962-ஆம் ஆண்டு திமுக வென்ற 48 இடங்களில் 39 இடங்களும் வன்னியர்கள் பூமியான வட தமிழ்நாட்டிலிருந்து கிடைத்தவை. அதன் பிறகும் கூட  பல தேர்தல்களில் திமுகவை தூக்கிப் பிடித்தவை வன்னியர் பூமி தான்.

இதற்கெல்லாம் கைமாறாக  திமுக வன்னியர்களுக்கு செய்தது துரோகம்… துரோகம்… துரோகம் தான். இவ்வளவுக்குப் பிறகும்  வன்னிய மக்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் செயல்படும் போது, அதை தட்டிக் கேட்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்? அந்த வகையில் கடமையைத் தான் நான் செய்தேன்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

அதற்குப் பிறகும் மு.க. ஸ்டாலின் செய்தவை அப்பட்டமான சாதி அரசியல் ஆகும். இலங்கையில்  வன்னி பகுதியை ஆட்சி செய்த பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான். அவன் நாட்டின் மீது வெள்ளையர் பல முறை படையெடுத்தும் தோல்வியே பரிசாக கிடைத்தது. வீழ்த்த முடியாத பண்டார வன்னியனை, காக்கை வன்னியன் என்பவன் காட்டிக் கொடுத்ததால் ஆங்கிலேயர்கள் வீழ்த்தினர். இலங்கையில் பண்டார வன்னியனுக்கு எதிராக எப்படி காக்கை வன்னியன் பயன்படுத்தப்பட்டானோ, அதேபோல், விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியையும், என்னையும் வீழ்த்துவதற்காக இங்குள்ள சில வன்னியர்களை மு.க. ஸ்டாலின் களமிறக்கினார்.

அவர்களும் முதலாளி விசுவாசத்தில் தெருவுக்குத் தெரு மேடைகளை அமைத்து ஸ்டாலின் கொடுத்த பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினார்கள். கொள்கை பேசப்பட்டிருக்க வேண்டிய களத்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தான் அவர்கள் நடத்தினார்கள். விழுப்புரம் உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் பெரும்பான்மை வன்னிய சமுதாயத்தினர் திமுகவில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வந்துவிடக் கூடாது என்று தமது துதிபாடிகள் மூலம் அடக்கி வைத்திருக்கும் மு.க. ஸ்டாலின், திடீரென வன்னியக் காவலன் வேடமிட்டு வந்தால் அதை ரசிப்பதற்கு இது நாடகம் அல்ல… அரசியல். இவ்வாறாக ஒவ்வொரு கட்டத்திலும் வன்னியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக ஸ்டாலின் செய்தவை சாதி அரசியலா… அதை முறியடிக்க பா.ம.க. செய்தது சாதி அரசியலா? என்பதை அரசியல் வல்லுனர்கள் அறிவார்கள்.

போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை  நெருங்கக் கூட விடமாட்டார்கள். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். விக்கிரவாண்டியில் சாதி அரசியல் என்றால், நாங்குநேரியில் சாதியுடன் மத அரசியலையும் சேர்த்து  செய்து மக்களிடம் பிளவை ஏற்படுத்தி வெற்றி பெற ஸ்டாலின் முயன்றார். ஆனால், அந்தத் தொகுதி  மக்களும் மு.க. ஸ்டாலினின் தீய நோக்கத்தை உணர்ந்து தோல்வியை பரிசாக அளித்திருக்கின்றனர்.

ALSO READ:  நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

தேர்தலில் வெற்றி என்பது மிகவும் அவசியம் ஆகும். அதை போராடித் தான் பெற வேண்டுமே தவிர, பொய்யுரைத்து, ஏமாற்றி பெறக் கூடாது. ஆனால், வெற்றிக்காக திமுக தலைவர் ஸ்டாலின் கையிலெடுப்பது எப்போதுமே இரண்டாவது அஸ்திரத்தை தான். சாதாரண நேரத்தில் எட்டு வழிச்சாலை வளர்ச்சிக்கான திட்டம் என்று கூறி விட்டு, தேர்தல் வந்தால் அத்திட்டத்தை எதிர்ப்பது போல நாடகமாடுவது, தேர்தலின் போது மதுவிலக்கு முழக்கமிட்டு விட்டு, தேர்தல் முடிந்ததும் திமுகவினர் நடத்தும் ஆலைகளில் மது உற்பத்தியை அதிகரிப்பது, நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து ஏழைகளை கடனாளி ஆக்குவது என திமுகவின் தேர்தல் திருவிளையாடல்கள் அனைத்துமே இரண்டாவது வகையைச் சேர்ந்தவை தான். ஆனால், இதற்கெல்லாம் இனி ஏமாறாத அளவுக்கு மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர்.

திமுகவில் உள்ள வெள்ளை மனம் படைத்த வன்னியர்களும் மொத்தமாக சுரண்டப்படுவதற்கு முன்பாக விழித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இனியாவது ஏமாற்றும் அரசியலை கைவிட்டு, அறம் சார்ந்த அரசியல் செய்ய மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும்.

  • மருத்துவர் ராமதாஸ் (நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version