
கோயில் அர்ச்சகர் கண்ணில் மிளகாய் பொடி போட்டு அடித்து தாக்கிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலயத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த அர்ச்சகர் பவனின் கண்களில் காரப்பொடியைத் தூவிய பெண்கள், பின்னர் அவரை தாக்கியதுடன், அடிக்கவும் செய்தனர். மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.
ஓர் ஆலய அர்ச்சகர் மீது பெண்கள் பலர் ஒன்றாக சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பீமவரம் ஹெச்பி காலனியில் சாயிஸ்ரீசக்தி ஆலயத்தில் ‘கோட்ட’ பவன் அர்ச்சகராக பணியில் உள்ளார். பவனுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுவே இந்தச் சம்பவத்துக்கு மூலகாரணமாக அமைந்திருக்கிறது.
ஆலய கமிட்டியைச் சேர்ந்த மோகன் ரெட்டிக்கும் பவனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக வாக்குவாதம் நடந்து வருகிறது. இதனிடையே ஞாயிறு அன்று மோகன் ரெட்டியின் மகள் தன் தந்தையைப் பார்ப்பதற்காக கோயிலுக்கு வந்தார். ஆனால் அந்த நேரத்தில் அர்ச்சகர் கோட்ட பவன் தன்னை தரக்குறைவாகப் பேசிவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டினார்.
அதனைக் கேட்ட மோகன் ரெட்டியின் உறவினர்களும் பெண்மணிகளும் பெரிய அளவில் திரண்டு, கோவிலுக்கு வந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்த பவன் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவினர். பின்னர் அவரைப் போட்டு சரமாரியாக அடித்தனர். அவருடைய ஆடைகளைக் கிழித்தனர்.
அந்த நேரத்தில் பிற அர்ச்சகர்கள் குறுக்கே வந்து அந்த பெண்களிடமிருந்து பவனை காப்பாற்றினர். இந்தச் சம்பவம் குறித்து மோகன் ரெட்டியின் மகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அர்ச்சகரும் தன்னைத் தாக்கியது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருவரின் புகார்களையும் பதிவு செய்து கொண்ட போலீசார் கோவிலின் சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசீலித்து வருகின்றனர்.